கல்லறை மேல் பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராதே.. நா. முத்துக்குமார் நினைவு தினம் இன்று!

சென்னை: கவிஞரும் பாடலாசிரியருமான நா. முத்துக்குமாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் நா. முத்துக்குமாரின் பாடல் வரிகளை பதிவிட்டு அவருக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காதல் பாடல்களில் கவிதை வரிகளையும் சமூக கருத்துக்களையும் கலந்து கொடுத்த கவிஞர் இன்று நம்மிடையே இல்லாதது மிகப்பெரிய இழப்பு தான்.

நா. முத்துக்குமார் நினைவு தினம்

கடந்த 2016ம் ஆண்டு மஞ்சக்காமலை நோயால் காலமானார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார். அவர் மறைந்தாலும் அவர் தமிழ் திரையுலகுக்கு விட்டுச் சென்ற அந்த கவிதை பாடல்கள் என்றுமே ரசிகர்கள் நெஞ்சில் இருந்து மறையாது. 1975ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்த ஒப்பில்லா கவிஞர் நா. முத்துக்குமார் இவ்வளவு விரைவாக பிரிந்து செல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

2 தேசிய விருதுகள்

2 தேசிய விருதுகள்

இயக்குநர் ராம் இயக்கி நடித்த தங்கமீன்கள் படத்தில் இடம்பெற்ற “ஆனந்த யாழை மீட்டுகிறாள்” என்கிற பாடலுக்காக தேசிய விருதை முதல் முறையாக பெற்றார் நா. முத்துக்குமார். இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் படத்தில் இடம்பெற்ற “அழகு” பாடலில் “மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூடத்தான் அழகு” என பாடல் வரிகளை எழுதி அந்த பாடலுக்கும் தேசிய விருதை தட்டிச் சென்றார்.

கல்லறை பூக்கள்

கல்லறை பூக்கள்

தேவதையை கண்டேன் படத்தில் கல்லறை பூக்களுக்கும் கவிதையில் இடம் கொடுத்திருந்தார் நா. முத்துக்குமார். “கல்லறை மீது பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராது” என அவர் எழுதிய வரிகளுக்காக அப்போதே தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறினார்கள். யுவன் சங்கர் ராஜா இசைக்கு மிகப்பெரிய தூணாக இருந்தது நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள். இருவரது காம்போவில் பாடல்கள் வந்தாலே ரசிகர்களுக்கு இசை விருந்து தான் என்கிற நிலை தற்போது இல்லையே என்பது தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வேதனையை அளித்துள்ளது.

சமூக அக்கறை

சமூக அக்கறை

கண்ணதாசன் போல இந்த காலத்தில் பல வித பாடல்களை எழுத வாய்ப்புகள் சினிமாவில் மிகவும் குறைவு. கிடைக்கும் காதல் பாடல்களிலேயே சமூக அக்கறையை கலந்து அதனால் தான் எழுதி வருகிறேன் என நா. முத்துக்குமாரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்பே” பாடல் எல்லாம் எப்போதும் நா. முத்துக்குமாரின் பெயரை ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அந்த இடம் அப்படியே இருக்கு

அந்த இடம் அப்படியே இருக்கு

1999ம் ஆண்டு வெளியான மலபார் போலீஸ் படத்தில் ஹாலிவுட் முதல் என்கிற பாடலை எழுதி அறிமுகமான நா. முத்துக்குமார், பல ஆயிரம் பாடல்களை தமிழ் சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் கொடுத்துள்ளார். அவர் மறைந்தாலும், இன்னமும் அவரது இடம் அப்படியே இருக்கிறது. தாலாட்டு, காதல், வலி, இன்பம், அழுகை, கல்லறை வரை ஏகப்பட்ட கருவில் கவிதைகளை வடித்துத் தந்த அந்த பேனா இந்நேரம் இருந்திருந்தால் லட்சக் கணக்கான கவிதைகளை பாடல்களாக மாற்றியிருக்கும்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.