ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் நேற்று இரவு தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் காவல் உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370, கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதர்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்தது. அதன் பின்னர், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அங்கு தீவிரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டது. இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்தது காஷ்மீரில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு உத்வேகம் அளித்ததால் அங்கு மீண்டும் தீவிரவாதிகளின் அராஜகம் தலைதூக்கியுள்ளது.
காவல்துறையினர், வெளிமாநிலத்தவர்கள், காஷ்மீர் பண்டிட்டுகள் ஆகியோரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் கூட தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், காஷ்மீரின் குல்ஹாம் மாவட்டத்தில் உள்ள கொய்மா பகுதியில் நேற்று இரவு காவல் உதவி ஆய்வாளர் தஹீர் கான் (40) தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த தீவிரவாதிகள் அவர் மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த தஹீர் கானை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தப்பியோடிய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 11-ம் தேதி தீவிவராதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இவர்களில் தமிழக ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.