நாட்டில் இன்னும் தீண்டாமை கொடுமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில்கூட பஞ்சாயத்துத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சமூக பிரமுகர்கள் தேசியக்கொடியை ஏற்ற முடியாத கொடுமைகள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், வடமாநிலங்களில் இதைவிட நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜலோரா மாவட்டத்திலுள்ள சுரானா என்ற கிராமத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 9 வயது பட்டியலின சிறுவன் ஒருவன் படித்துவந்திருக்கிறான். இந்த நிலையில், அந்த பட்டியலின மாணவன் தாகமெடுத்ததால் பள்ளியிலிருந்த தண்ணீர் பானையைத் தொட்டு தண்ணீர் மொண்டு குடிக்க முயன்றிருக்கிறான். அதைக்கண்டு ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியர் சாயில் சிங் (40) என்பவர், அந்த பட்டியலின மாணவனை மிகக் கடுமையாகத் திட்டித் தீர்த்ததுடன், சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அதில் மாணவனின் முகம், காது உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதில், அந்த மாணவன் அரை மயக்க நிலைக்குச் சென்றுவிட்டான். பின்னர் அந்த மாணவனை மீட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும், காயங்கள் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான். ஆனால் அங்கும் மாணவனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை…. அதனால் அங்கிருந்து அகமதாபாத்துக்குக் கொண்டு செல்லப்பட்டான். இந்த நிலையில், அகமதாபாத்தில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து போனான்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்மீது கொலை வழக்கு, தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கும் அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட், உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல்செய்ய காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரி ஹர்ஸ் வர்தன் கூறுகையில், “மாணவன் தண்ணீர் பாத்திரத்தைத் தொட்டதால் ஆசிரியர் அவனைக் கடுமையாக அடித்துள்ளார். தண்ணீர் பாத்திரத்தை மாணவன் தொட்டது குறித்து இன்னும் விசாரிக்கப்படவில்லை. மாணவனை அடித்த ஆசிரியர்மீது கொலை வழக்கு பதிவுசெய்து கைது செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வன்முறை ஏற்பட்டுவிடாமல் இருக்க இணையத்தள சேவை முடக்கப்பட்டுள்ளது.