சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக கோபிநாத்தின் நீயா நானா காணப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி விவாத நிகழ்ச்சியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் சிறப்பான விவாதங்களை முன்னெடுத்து வருகிறது.
இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியில் குழந்தை வளர்ப்பில் எல்லை மீறி ரூல்ஸ் போடும் நியூ ஏஜ் அம்மாக்கள் மற்றும் பெரியவர்கள் குறித்த தலைப்பில் விவாதம் முன்வைக்கப்பட்டது.
விஜய் டிவி நிகழ்ச்சி
விஜய் டிவியின் ஆங்கராக நீயா நானா ஷோ மூலம் சிறப்பாக அறியப்படுபவர் கோபிநாத். இவர் இந்த நிகழ்ச்சியை 10 ஆண்டுகளை கடந்து சிறப்பாக வழி நடத்தி வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி வித்தியாசமான தலைப்புகளில் மாற்றுக் கருத்துக் கொண்ட இருவேறு தரப்பினரை முன்வைத்து விவாதத்தை செய்து வருகிறது.

குழந்தை வளர்ப்பு குறித்த விவாதம்
இந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் விவாதமாக குழந்தை வளர்ப்பில் எல்லை மீறி ரூல்ஸ் போடும் நியூ ஏஜ் அம்மாக்கள் மற்றும் பெரியவர்கள் எதிரெதிர் தரப்பில் இருந்துக் கொண்டு விவாதங்களை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் அம்மாக்களில் ஒருவர், தன்னுடைய குழந்தைக்கு தான் இதுவரை சாக்லேட் கொடுத்ததில்லை என்றும் யாரையும் கொடுக்கவும் அனுமதித்ததில்லை என்றும் கூறினார்.

வரம்பு மீறும் அம்மாக்கள்
இதேபோல தன்னுடைய குழந்தை அமர்ந்து போகும் காரில் தான் யாரையும் அமர விட்டதில்லை என்று கூறி மற்றொரு அம்மா அதிர்ச்சி கொடுத்தார். குழந்தைக்கு முத்தம் கொடுக்க அனுமதிக்காத அம்மா போன்ற பலரை இந்த நிகழ்ச்சியில் காண முடிந்தது. இதையடுத்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல மருத்துவர் ஷாலினி பேசினார்.

டாக்டர் ஷாலினி விளக்கம்
அவர் கூறிய விஷயம் கோபிநாத் உள்ளிட்ட அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. காலங்காலமாக குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும், குரங்குகள்கூட தன்னுடைய குட்டிகளுக்கு முத்தம் கொடுப்பதையே வழக்கமாக வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூளையில் ரசாயன மாற்றம்
தன்னுடைய மூச்சு, முத்தம் மூலமாக பெரியவர்கள் பெராமான்ஸ் என்ற ஹார்மோனை குழந்தைகளுக்கு கடத்துவதாகவும் இதன்மூலம் குழந்தைகளின் மூளையில் மிகப்பெரிய ரசாயன மாற்றங்களும் நரம்பு முனைகளிலும் சிறப்பான மாற்றங்களும் மாறுவதாக ஷாலினி தெரிவித்துள்ளார்.

வாய் மூலமாக சோறூட்டிய அம்மாக்கள்
மனிதன் தோன்றிய ஆரம்ப காலகட்டங்களில் குழந்தைகளுக்கு பெண்கள், தங்களது வாயில் அரைத்த பொருட்களையே நேரடியாக ஊட்டியதாகவும் இதன்மூலம் குழந்தைகளுக்கு அவர்கள் அதிகமான வலிமையையே கொடுத்ததாகவும் ஷாலினி மேலும் தெரிவித்தார். நம்முடைய பழைய கலாச்சாரத்தையும் நாம் புறந்தள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.