கை கழுவிய அண்ணாமலை; பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி!

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் என்பவர் வீரமரணம் அடைந்தார்.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்று, சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்துவதற்காக வந்து இருந்தார்.

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வருகையை முன்னிட்டு, பாஜகவினரும் அங்கு குவிந்து இருந்தனர். அப்போது, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திய பின்னரே பாஜகவினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை உருவ பொம்மையை செருப்பால் அடித்து திமுகவினர் கடும் எதிர்ப்பு!

இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டபோது, அவரது கார் மீது செருப்பை வீசி எறிந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரம் மீனவர்களுடன் படகில் சென்று சுதந்திர தினவிழாவை கொண்டாடினார். இதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டது விரும்பத்தகாத சம்பவம். அது தவறு. அமைதியை விரும்பும் கட்சியான பாஜகவில் இதுபோல நடந்தது வருத்தம் அளிக்கிறது.

நான் முன்பாக விமான நிலையம் வந்திருந்தால், சம்பவத்தை நடக்க விடாமல் தடுத்து இருப்பேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் பாஜக கட்சியை விட்டுச் சென்றது அவரது விருப்பம். கட்சித்தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் பாஜக உறுதியாகவே இருக்கிறது.

இதில் விதிமுறையை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அப்பாவிகள். அவர்கள் மீது வேண்டும் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

நிதி அமைச்சர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அப்பாவிகள் என்றும், மற்றவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் காட்டிக்கொடுத்து அண்ணாமலை கை கழுவி உள்ளதால், பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.