புதுச்சேரி சட்டசபை, 18ம் தேதி மீண்டும் கூடுகிறது. நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, வரும் 22ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரி அரசு, கடந்த மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யாமல், 5 மாதத்திற்கு மட்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது.இந்த பட்ஜெட் இம்மாதத்துடன் முடிவடைவதை தொடர்ந்து, முழு பட்ஜெட் தாக்கல் செய்ய, கடந்த 10ம் தேதி, புதுச்சேரியின் 15வது சட்டசபையின், மூன்றாவது கூட்டத் தொடர் கவர்னர் தமிழிசை உரையுடன் துவங்கியது. ஆனால், புதுச்சேரி அரசு அனுப்பிய ரூ.11 ஆயிரம் கோடி பட்ஜெட் கோப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், சபாநாயகர் செல்வம், சட்டசபையை காலவரையறையின்றி ஒத்தி வைத்தார்.இந்நிலையில், புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட் சமர்ப்பிக்க ரூ.10,697 கோடிக்கு மத்திய உள்துறை ஒப்புதல் வழங்கியது.
இதனால், புதுச்சேரி அரசுஏற்கனவேதிட்டமிட்டபடி 11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய, ரூ.303 கோடி வெளியில் கடன் பெற வேண்டும்.அல்லது, மத்திய அரசு அனுமதித்த தொகைக்கு ஏற்ப திட்ட மதிப்பீட்டை மாற்ற வேண்டியுள்ளது.பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு உள்ளது.அதனையொட்டி, கடந்த 10ம் தேதி காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்ட சட்டசபை, வரும் 18ம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு கூடுகிறது. அன்றும், மறுநாள் 19ம் தேதியும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து, 20, 21 ஆகிய இரு நாட்கள் வார விடுமுறைக்கு பின், 22ம் தேதி காலை 9:30 மணிக்கு, நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.அதனைத் தொடர்ந்து, 23ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை, வரும் 30ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement