“சாம்பல் கரையும், வார்த்தை கரையுமா?”..நீங்கா நினைவுகளை நெஞ்சோடு விதைத்த நா.முத்துக்குமார்!

ஒரு சொல்லிலோ, ஒரு வார்த்தையிலோ, ஒரு பாடல் வரியிலோ அடக்கி விட முடியாத காவிய கவிஞன், நா.மு. இன்று அவரது 6-வது நினைவுநாள். இந்த நாளில் அவர் நம்மோடு இல்லையென்றாலும், நாம் இருக்கிறோமே… அவரைக் கொண்டாட! அதற்காகவே இந்தக் கட்டுரை. 

வரிகளில் வானத்தை அளந்த, வானம் தாண்டியும் மனித மனங்களை வசப்படுத்தும் அந்தக் கவிஞன், எக்காலத்துக்குமானவன் என்பது நமக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. கல்லறை பூக்களுக்கும் கருணை காட்டிய அவர், தன் சிறு வயதிலேயே தாயை இழந்து, பின் தந்தையின் முயற்சியினால் புத்தகங்களின் அரவணைப்பில் வளர்ந்து, பின்னாளில் வறுமை தந்த கண்ணீரை போக்க மனித மனங்களுக்குள் பாடல் வரிகளாலும், கவிதைகளாலும் பட்டாம்பூச்சி விற்றார். ஆம் அவர்தான், பாடலாசிரியர் நா.முத்துக்குமார்!

image

“நா.முத்துக்குமார், ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழ்ச் சமூகத்தைத் தன் பாடல்களால் ஆக்கிரமித்தவன். அவனுடைய `ஆனந்த யாழ்’ மீட்டப்படாத வீடில்லை. அவனுடைய காதல் வரிகளைப் பயன்படுத்தாத காதலர்கள் மிகக்குறைவு. சொல்லப்போனால், தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப அட்டையில் பதியப்படாத உறுப்பினன் அவன். அவனைப் பற்றி அவனுடைய வரிகளில் சொல்லவேண்டுமென்றால், அவன் பேரன்பின் ஆதி ஊற்று. முத்து இருப்பான்… அவனுடைய பாடல்கள் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு நொடியிலும் அவன் வாழ்ந்துகொண்டிருப்பான்” என்பார் இயக்குநர் ராம்.

image

அப்பேற்பட்ட நா.முத்துக்குமாரை 2000-ம் ஆண்டுதான் தமிழ் சினிமா பாடலாசிரியராக அணைத்துக்கொண்டது. அதற்கு முன் காஞ்சிபுரத்தில் இயற்பியலில் இளங்கலையும், பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ தமிழ் இலக்கியமும் படித்திருந்தார். பச்சையப்பன் கல்லூரி, தமிழ் சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் நிறைய இலக்கியவாதிகளை கொடுத்த கல்லூரி என்றே சொல்லலாம். ஒவ்வொரு மரத்தடிக்கும் ஒவ்வொரு கவிஞன் என்று பச்சையப்பன் கல்லூரி உருவாக்கிய பூந்தோட்டத்தில் பூத்த முல்லை மலர்தான், கவிஞர் நா.முத்துக்குமார். அவரை முல்லையோடு ஒப்பிட முக்கிய காரணம், அவருடைய முதல் பாடல்தாம். சீமான் இயக்கத்தில் ‘வீரநடை’ படத்துக்காக நா.முத்துக்குமார் 2000-ல் எழுதிய முதல் பாடலின் முதல் வரியில், முல்லைப்பூ இருக்கும். கூடவே முத்துவும் இருப்பார். அந்த வரி – `முத்துமுத்தாய்ப் பூத்திருக்கும் முல்லைப் பூவைப் புடிச்சிருக்கு..’

image

இலக்கியத்தில், நா.முத்துக்குமாரை மிஞ்ச ஆளில்லை. முதுகலை தேர்வில் டாப் ரேங்க் எடுத்த முத்துக்குமார், கூடவே ‘தமிழ்த் திரைப்படப் பாடல்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து, பிஹெச்.டி-யும் செய்திருக்கிறார். படிப்புக்குப்பின் சில பத்திரிகைகளில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக பணியாற்றிய அவர், பின் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக சென்று சேர்ந்துள்ளார். அதன்பின்னரே அவர் பாடல் எழுத வந்துள்ளார். முதன் முதலாக அவர் எழுதிய பாடல், இசையமைப்பாளர் தேவாவுடனானது.

நா.முத்துக்குமாரின் வாழ்வில் அதிக ஹிட் பாடல்கள், யுவன் ஷங்கர் ராஜாவுடன் அவர் இணைந்தபோதுதான் நடந்தது. இது யுவனுக்கும் பொருந்தும். அதனாலேயே யுவன் ஷங்கர் ராஜா தனது ஒரு பேட்டியில், ‘‘அவருடைய வரிகள் என்னோட கரியர்ல பெரிய மாற்றத்தைக் கொடுக்கும்னு கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலை. ‘7ஜி ரெயின்போ காலனி’ ரிக்கார்டிங்குக்காக அவரை முதல்முறையா ஃப்ளைட்ல மும்பைக்குக் கூட்டிப்போனேன். அட்டகாசமான வரிகள். நிறைய விஷயங்கள் நினைச்சுப்பார்க்காம நடந்தது” என்றிருப்பார்.

image

நா.முத்துக்குமார் பற்றி பேசும்போது, இரண்டு விஷயங்களை நம்மால் பேசாமல் இருக்கவே முடியாது. அவற்றில் ஒன்று, யுவன் ஷங்கர் ராஜா – நா.முத்துக்குமார் கூட்டணி. இன்னொன்று, அவருடைய பாடல் நடை. முதலில், பாடல் நடை பற்றியே பேசிவிடுவோம். பாடல் நடை என இங்கு நாம் குறிப்பிடுவது, மெட்டுக்கேற்ற வரி – வரிக்கேற்ற இசை. நா.முத்துக்குமாரின் எல்லா பாடல் வரிகளும், இசைக்கேற்ப வளைந்து கொடுக்கும். அல்லது அந்த இசையே இவருடைய சொல்லுக்கு வளைந்து கொடுக்கும். ஒரேபாட்டில் நம்முடைய பல உணர்வுகளை அவரால் தூண்டி விட முடியும்.

உதாரணமாக `நினைத்து நினைத்து பார்த்தேன்…’ பாடலில் `எடுத்து படித்து முடிக்கும் முன்னே, எறியும் கடிதம் எதற்கு பெண்ணே’ என்று அவரால் நம்மை உருகவைக்கவும் முடியும்; அந்தப் பாடல் முடியும் முன் `உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே? தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே’ என்று நம்மை அழவைக்கவும் முடியும்.

`மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு

மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு

image

புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு’

என அழகுக்கு ஒரு பாடல் முழுக்க விளக்கம் கொடுத்திருப்பார் நா.முத்துக்குமார்.

மெல்லிசைக்கு எவ்வளவு ஆழமான வரிகள் எழுதுவாரோ, அதேபோலத்தான் துள்ளளிசைக்கும்! அதற்கு சிறந்த உதாரணம், `வெயிலோடு உறவாடி’ பாடல். கேட்கும்போதே நம்மை வெயிலோடு மல்லுக்கட்ட வைக்கும்! கல்லூரி காலத்தில் ஆங்கிலம் கலந்த தமிழில் பாட்டு பாடும் வரிகளையும் தனதாக்குபவர் முத்துக்குமார். அப்படித்தான் `ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜ்ஜூதான் ஆல் இஸ் வெல்-ம்!

image

நா.மு பாடல்களின் ஸ்பெஷலே, அவருடைய எளிமையான வார்த்தைகள்தாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும், எளிமையான வார்த்தைகளையே அவர் தனது வரிகளில் பிரயோகப்படுத்துவார். இப்படி நா.மு.-வின் பாடல்களுக்கு ஏராளமான உதாரணங்களை நாம் சொல்லலாம்.

யுவனுடனான அவருடைய கூட்டணியும் அப்படித்தான். சொல்லிலடங்காதவை.

`ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது;

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது

என்று காதல் கொண்டேன் படத்தில் எதுவுமே கிடைக்கப்பெறாத ஒருவனுடைய வாழ்வில் வரும் முதல் ஒளியை சொல்வதாகட்டும்…

image

இல்லை `கற்றது தமிழ்’ படத்தில்

`முதல்முதல் முறை வாழப் பிடிக்குதே

முதல் முறை வெளிச்சம் பிறக்குதே

முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே

நெஜமாத்தான் சொல்றியா?'.. பிரபாகர்களும், ஆனந்திகளும் வாழும் காதல் உலகம்.. 'கற்றது  தமிழ் '! | explaining katrathu tamil movie love portions |  Puthiyathalaimurai - Tamil News | Latest ...

முதல் முறை கதவு திறக்குதே

முதல் முறை காற்று வருகுதே 

முதல் முறை கனவு பலிக்குதே

என்பதாகட்டும் வாழ்வில் முதல் முதலாய் கிடைக்கும் ஒரு விஷயத்தை நா.மு.வால் மட்டுமே அப்படியே எளிமையாகவும், இசைக்குள் பூட்டி வைத்து சொல்லமுடியும்.

`புதுப்பேட்டை’ படத்தில் ஒரு நாளில் பாடலில்,

`எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்துருக்கும்.

அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூப்பூக்கும்’

image

என்ற நா. முத்துக்குமாரின் வரிகளை கேட்கும்போது நாம் வாழ்க்கையின் விளிம்பில் இருந்தாலும் நமக்கொரு தெளிவு கிடைக்கும். அப்படித்தான் 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் `கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்’ பாட்டில் `பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை; திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை’ என்ற பாடல் வரியும்! ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஒரு புது நம்பிக்கையையும் இறக்கையையும் கொடுக்கும்.

image

நா.முத்துக்குமார் இந்த உலகை விட்டு இவ்வளவு விரைந்து செல்ல வேண்டியது ஏன் எனக்கேட்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அவர் மீது உரிமையுள்ள ஒவ்வொருவரும், `ஏன் இவ்வளவு சீக்கிரம் எங்களை பிரிந்தாய்’ என கோபப்பட்டிருக்கக்கூடும். ஆனால், நா.மு.-வே சொல்வது போல, `காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது. உங்களிடம் கோபம் கொண்டு நாங்கள் எங்கு போவது ? என்ன ஆவது ? எங்கள் வாழ்வும் தாழ்வும் உங்களையே சேர்ந்தது நா.மு!’ கடைசி துளி இசை இந்த உலகில் உயிர்த்திருக்கும் வரை நீங்களும் எங்களோடே இருப்பீர்கள் என நம்புகிறோம்! 

நா.முத்துக்குமாரின் மிகச்சில, ஹிட் பாடல்கள் பற்றி மட்டுமே எங்களால் இங்கு சொல்ல முடிந்துள்ளது. இதைத்தாண்டி அவர் எழுதிய கவிதைகளும், பாடல்களும் எண்ணிலடங்காதவை. அப்படி உங்கள் மனதை கவர்ந்த பாடல் வரியை, கமெண்ட் வழியாக எங்களோடு பகிருங்கள்!

(ஓவியங்கள்: ரம்யா)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.