சீன உளவு கப்பல் வருகை… இந்தியாவுக்காக வெளியுறவு கொள்கையை மாற்ற முடியாது..! இலங்கை அதிரடி அறிவிப்பு

கொழும்பு,

சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது. இந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா-சீனா இரு நாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர். இறுதியில் சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக யுவான் வாங்-5 உளவு கப்பல் நாளை மறுநாள் ஹம்பாத்தோட்டை துறைமுகத்துக்கு வந்துவிடும். 22-ந் தேதி வரை அது அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும். இந்த 7 நாட்களில் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் அந்த கப்பல் ஈடுபடக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் சீனா இதையெல்லாம் நிச்சயம் மதிக்காது. நிச்சயமாக அது உளவு தகவல்களை சேகரிக்கும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கிறது. ஆனால் யுவான் வாங்-5 உளவு கப்பல் மூலம் 750 கி.மீ. சுற்றளவுக்கு இருக்கும் ஒவ்வொன்றையும் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இந்த கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.

விண்வெளி ஆய்வுக்கு மட்டுமே இந்த கப்பல் பயன்படுத்தப்படும் என்று பொதுவாக சீனா சொல்லிக் கொள்கிறது. ஆனால் முழுக்க முழுக்க உளவு பார்க்கும் வேலையைத் தான் இந்த கப்பல் செய்கிறது. இதே போன்று 7 உளவு கப்பல்களை சீனா வைத்திருக்கிறது. அந்த நாட்டிடம் உள்ள மிகப் பெரிய உளவு கப்பல் இந்த யுவான் வாங்-5 கப்பல் தான்.

இதனால்தான் இந்த கப்பலை நினைத்து இந்திய ராணுவம் அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்தியாவில் எல்லைக்கு மிக மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும். 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உளவு கப்பல் 11 ஆயிரம் டன் எடைகொண்ட பொருட்களை சுமக்கும் வல்லமை கொண்டது. கடல் சார் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு உள்பட பிரமாண்டமான ராக்கெட்டுகளை ஏவும் வசதியும் இந்த கப்பலில் இருக்கிறது.

எனவே இந்த உளவு கப்பல் சேகரிக்கும் தகவல்கள் அனைத்துமே சீனாவின் ராணுவ புலனாய்வு அமைப்புக்கு அடுத்த நிமிடமே சென்று சேர்ந்துவிடும். இதுதான் இந்தியாவுக்கு ஏற்படப் போகும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று இந்தியா உறுதியாக கருதுகிறது.

இந்த நிலையில் சீன உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் எதிர்ப்பை ஏற்று கொள்ள முடியாது என இலங்கை எம்பி சர்த் வீரசேகர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவின் தேவைக்காக இலங்கையின் வெளிவிவகார கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது என்ற அவர், சீனா இந்தியாவை உளவு பார்க்க அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றார்.

இந்தியாவை கடல் பரப்பில் இருந்த வாறே சீனா உளவு பார்க்க முடியும் என்றும், அதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் சர்த் வீரசேகர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.