கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சுதந்திர தினத்தை ஒட்டி பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு இந்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது கொரோனா தொற்றை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்தியா நாளை (15) தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை ஒட்டி இந்த ஆண்டு சுதந்திர தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாட இந்தியா அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிடுவதற்கு ஏற்ப சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தொடர்ந்து 3 நாட்கள் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு இந்தியா பிரதமர் நரேந்திர மோதி இந்தியா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தியா உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தூய்மை இந்தியா பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வளர்களைக் கொண்டு முக்கிய பகுதிகளை தூய்மைப்படுத்துமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.