நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலான செய்தித்தாள் விளம்பரத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தை கர்நாடக அரசு புறக்கணித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டின் 75-வது சுதந்திர தினம் “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் – சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய பாஜக தலைமையிலான அரசு ஹர் கர் திரங்கா என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் மூவர்ணக் கொடியை முகப்பு புகைப்படமாக மாற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஹர் கர் திரங்கா பிரசாரத்தின் மூலம் பல்வேறு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஹர் கர் திரங்கா பிரசாரத்தின் கீழ் கர்நாடக மாநில அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் செய்தித்தாள்களில் முழுப் பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. “இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறு கோடிக்கணக்கான இந்தியர்களின் தியாகத்தால் நிரம்பியுள்ளது. இன்று, இந்தியாவின் 76ஆவது சுதந்திர ஆண்டை நாம் கொண்டாடும் போது, அவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். அவர்களின் தன்னலமற்ற தேசபக்தியைப் பின்பற்றுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மகாத்மா காந்தி, மவுலானா ஆசாத், சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் புகைப்படங்கள் அவர்களை பற்றிய சிறு குறிப்புடன் இடம்பெற்றுள்ளது. ஆனால், சுதந்திர போராட்ட தியாகியும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் அதில் இடம்பெறவில்லை. ‘புரட்சியாளர் சாவர்க்கர்’ என்று அடைமொழியிட்டு சாவர்கரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
“விநாயக் தாமோதர் சாவர்க்கர் பல புத்தகங்களை வெளியிட்டார். இது புரட்சிகர வழிமுறைகள் மூலம் முழுமையான சுதந்திரத்தைப் பெறுவதற்கு வழிவகுத்தது. அவர் அந்தமான் நிக்கோபார் சிறையில் அடைக்கப்பட்டு, அதிகப்படியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்.” என்று சாவர்கரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்கள் தொடர்பான விளம்பரத்தில் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது ஒரு அற்பத்தனமான செயல் என விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ், “தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள துடிக்கும் கர்நாடக முதல்வர், நேருவின் சிறந்த அபிமானிகளான அவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை மற்றும் அவரது தந்தையின் முதல் அரசியல் குரு எம்.என்.ராய் ஆகிய இருவரையும் அவமதித்துள்ளார். இது பரிதாபத்துக்குறியது.” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏற்கனவே உள்ள ஓவியத்தில் மகாத்மா காந்தி, ராணி லட்சுமி பாய் மற்றும் பிற தலைவர்களுடன் நேருவின் புகைப்படம் உள்ளது. எதிர்க்கட்சிகள் உண்மைக்கு புறம்பான ஒன்றை மக்களுக்கு காட்டி ஊதிப் பெரிதாக்க முயல்கின்றன என்று அரசின் நிலைப்பாட்டை பாஜக தலைவர் மோகன் தெளிவுபடுத்தியுள்ளார்.