சென்னை, அரும்பாக்கம் பகுதியில் உள்ள ரசாக் கார்டன் சாலையில் பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவின் கிளை செயல்பட்டுவருகிறது. நேற்று மேலாளர், நகை மதிப்பீட்டாளர், காவலாளி உட்பட ஐந்து பேர் பணியிலிருந்ததாகச் சொல்லப்படுகிறது. மதியம் மூன்று மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு வந்திருக்கிறார். வெளியில் கதவு மூடப்பட்ட நிலையில் உள்ளே யாரோ ஒருவரின் சத்தம் கேட்டிருக்கிறது. கதவைத் திறந்து பார்க்கும்போது வங்கி ஊழியர்கள் அனைவரும் கட்டப்பட்டிருந்திருக்கின்றனர். இதனையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவமறிந்து அரும்பாக்கம் பகுதி போலீஸார் வங்கிக்கு விரைந்துள்ளனர்.
காவல்துறையினர் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த வங்கிக் கிளையில் பணியாற்றும் முருகன் என்பவர்தான் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவர் வங்கியில் பணியாற்றும் ஊழியர் என்பதினால், அங்கிருந்த காவலாளி அவரிடம் சகஜமாகப் பேசியிருக்கிறார். அவர் கொண்டுவந்த குளிர்பானத்தைக் காவலாளி சரவணனுக்குக் குடிக்கக் கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வங்கியில் நுழைந்த மூன்று பேர் அங்கிருந்த ஊழியர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கழிவறையில் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.
பின்னர் கொள்ளையடிக்க வந்தவர்கள், லாக்கரிலிருந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முருகனின் புகைப்படத்தை வைத்து அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருக்கிறது. கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கியில் நகை கொள்ளை நடந்திருக்கிறது என்ற செய்தி பரவ ஆரம்பித்ததையடுத்து, நகையை அடமானம் வைத்தவர்கள் வங்கிக்குப் படையெடுக்க ஆரம்பித்தனர். அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் கொள்ளையர்களை விரைவில் பிடித்து உங்கள் நகைகளை மீட்டுவிடுவோம் என்று சொல்லி அனுப்பிவைத்திருக்கிறார்கள்.
வங்கி கொள்ளையர்களைப் பிடிக்கும் காவல்துறையினருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரிந்ததால், விரைவில் நகைகள் மீட்கப்படும் என்று வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் தலைநகரில் பரபரப்பான சாலையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “ தி.மு.க அரசின் காவல்துறையில் இதயம், ஈரல் முதல் அனைத்து பாகங்களும் செயலற்றுக் கிடக்கின்றன. இந்த விடியா தி.மு.க அரசின் முதல்வர், தமிழ்நாடு காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்து, மாநிலத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.