தரமற்ற உணவு குறித்து புகார் கூறிய உ.பி. காவலருக்கு கட்டாய விடுப்பு… பணியில் இருந்து நீக்க நடவடிக்கை என குற்றச்சாட்டு…

பிரோசாபாத்தில் உள்ள காவலர் உணவு கூடத்தில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று உத்தர பிரதேச மாநில காவல்துறையைச் சேர்ந்த காவலர் மனோஜ் குமார் என்பவர் புகார் கூறியிருந்தார்.

தங்களுக்கு வழங்கப்படும் சப்பாத்தியின் தரம் குறித்து அவர் கண்ணீருடன் கூறியதை பார்த்த ஒருவர் அதனை வீடியோவில் பதிவு செய்தார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தன்னை பணி நீக்கம் செய்யும் முயற்சியாக தனக்கு கட்டாய விடுப்பு கொடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்.

ஒரு வார காலம் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டுள்ள அதிகாரிகள் அதற்காக தன்னிடம் விடுப்பு விண்ணப்பம் எழுதி வாங்கியதாக கூறியுள்ளார்.

மேலும், தனது புகார் குறித்த வீடியோ வெளியானதில் இருந்து தன்னை அடைத்து வைத்திருந்ததாகவும் மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த காவல் துறை உயரதிகாரி கடந்த சில மாதங்களில் 15 முறை மனோஜ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட்டுள்ளதாக கூறினார்.

இதனை மறுத்த மனோஜ் குமார் தன்னை பணியில் இருந்து நீக்குவதற்காக உயரதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சி என்று கூறியதோடு, 2022 ம் ஆண்டு நவம்பர் என்று வருங்கால தேதியை குறிப்பிட்டு தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக போலியாக ஆவனம் தயாரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.