திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் 40 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பண்டிகை, தொடர் விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் திருமலையில் திரண்டனர். தங்கும் அறை கிடைக்காதவர்கள் திறந்த வெளியிலும், பூங்கா, சாலையோரங்களில் விடிய விடிய தங்கினர். சனிக் கிழமையான நேற்று முன்தினம் 83,422 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக் கிழமையான நேற்றும், சுதந்திர தினமான இன்றும் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். நேற்றைய நிலவரப்படி, ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 5 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 2ல் உள்ள 33 அறைகளும், வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 1ல் உள்ள 16 அறைகள் என அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளது. ஒரு அறையில் 500 பக்தர்கள் காத்திருக்கின்றனர்.இதனால், ராம்பகீஜா பக்தர்கள் ஓய்வறை வரை 5 கிமீ.க்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க 40 மணி நேரமாகும் என்று தெரிகிறது. வயதானவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுடன் வந்துள்ளவர்கள் பல மணிநேரம் காத்திருப்பதை தவிர்த்து, கோயில் முன்பு தேங்காய் உடைத்து வழிபட்டு ஊருக்கு செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.
