தேசியக் கொடியை உயர்த்தி பிடிக்கும் இந்தியாவின் உழைக்கும் வர்க்கம்!

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டின் 75-வது சுதந்திர தினம் “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் – சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய பாஜக தலைமையிலான அரசு ஹர் கர் திரங்கா என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் மூவர்ணக் கொடியை முகப்பு புகைப்படமாக மாற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இதையடுத்து, ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் பலரும் தேசியக் கொடியை முகப்பு படமாக வைத்து வருகின்றனர். இது பல விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள், ஜவஹர்லால் நேரு பிடித்திருக்கும் தேசியக் கொடியை முகப்பு படமாக வைத்து வருகின்றனர். பாஜக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஆர்.எஸ்.எஸ்., ட்விட்டர் பக்கத்தில் தேசியக் கொடி புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் ‘ஹர் கர் திரங்கா’ பிரசாரத்தை பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர். கம்யூனிஸ்டுகள், வழக்கம் போல், தங்கள் சொந்த சிவப்புக் கொடியை அதிகம் நேசிப்பதால், தேசியக் கொடி விவாதத்தில் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

உண்மையில், காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் தங்களது சொந்தக் கட்சிக் கொடிகள் உள்ளன. அதனை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் உயர்த்திப் பிடித்துக் கொள்வர். தேவைப்பட்டால், தங்களது அரசியல் அடையாளத்தை வெளிப்படுத்த தங்களது வீடுகளில் எப்போது வேண்டுமானாலும் தங்களது கட்சிக் கொடிகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, சாதி அடிப்படையில் சூத்திரர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளைக் கொண்ட இந்தியாவின் உற்பத்தி சமூகத்தின் பார்வையில், இந்திய தேசியக் கொடியை பார்ப்பது முக்கியமான ஒன்று.

குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான 2019 போராட்டங்களில் பிரத்தியேகமாக மூவர்ண கொடியும், அரசியலமைப்பும் பயன்படுத்தப்பட்டது. முகமது நபி பற்றிய பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற நாடு தழுவிய போராட்டங்களில் கூட தேசியக் கொடி பயன்படுத்தப்பட்டது. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களின் போது, காலிஸ்தானி மற்றும் பல்வேறு சங்கங்களின் கொடிகளை பார்க்க நேர்ந்தாலும், இந்திய தேசியக் கொடியே அங்கு உயரமாக பறந்தது.

சுதந்திர இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் வேறு சில போராட்டங்களில் மட்டுமே இவர்களை போன்று தேசியக் கொடிகளை அரவணைத்து பிடித்திருந்தன. புதிய அடையாளமாக திகழ்ந்த இந்த போராட்டங்கள் எல்லாம், மூவர்ணக் கொடியின் மீதான தேசிய உரிமையை வெளிப்படுத்தின.

மூவர்ண தேசியக்கொடி

ஆர்.எஸ்.எஸ்., நீண்ட காலமாக, அசோக சக்கரத்தை மையமாகக் கொண்ட தற்போதைய இந்தியக் கொடியை எதிர்த்து வந்துள்ளது. மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் எம்எஸ் கோவால்கர் தன்னுடைய Bunch of Thoughts என்ற புத்தகத்தில், நாட்டில் ஏற்கனவே தேசியக் கொடி இருக்கும்போது தலைவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக ஒரு புதிய கொடியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கொடி எப்படி உருவானது என கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசியக் கொடி குறித்து பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு புரட்சியின்போது சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை விவரிக்கும் வகையில் மூவர்ணங்கள் இணைக்கப்பட்டன. இதே போன்ற கொள்கைகளால் அமெரிக்கப் புரட்சியும் ஈர்க்கப்பட்டது. எனவே, அமெரிக்காவும் சில மாற்றங்களுடன் இதனைப் பின்பற்றியது. இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு புது உத்வேகத்தை கொடுத்தது. இதையறிந்த காங்கிரஸ் தலைவர்கள் மூவர்ணக் கொடியை கையில் எடுத்தனர்.

சாதி மற்றும் வர்ணாசிரம கட்டமைப்புகளை அகற்றுவதால், தேசியக் கொடியின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் எதிர்த்தனர். மூவர்ணக் கொடியின் சிவப்பு நிறம் – குங்குமப்பூ நிறம் (ஆர்எஸ்எஸ் காவியில் இருந்து வேறுபட்டது) கம்யூனிஸ்ட் என்றும், பச்சை நிறத்தை இஸ்லாம் என்றும் ஆர்எஸ்எஸ் பார்த்தது.

பாட்டாளி வர்க்கப் புரட்சியைக் குறிக்கும் சிவப்புக் கொடியைத் தவிர வேறு எந்தக் கொடியையும் கம்யூனிஸ்டுகளுக்கு ஆரம்ப காலத்திலிருந்தே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உழைக்கும் வர்க்கத்தின் உலகளாவிய பிரதிநிதியாக இருப்பதால், செங்கொடிதான் அவர்களுக்கு என்பது தனிக்கதை.

தேசியக் கொடியில் உள்ள குங்குமப்பூ காவி, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய மூன்று வண்ணங்களை அங்கீகரித்த அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் தேசியக் கொடியின் நடுவில் இராட்டைக்கு பதில், அசோக சக்கரம் வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை மகாத்மா காந்தி முன்மொழிந்தார்.

இறுதியாக 22 ஜூலை 1947 இல் தேசியக் கொடி அதன் தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் ஏற்றப்பட்டது. பாஜக அப்போது ஆட்சியில் இருந்திருந்தால், அசோக சக்கரத்துடன் கூடிய மூவர்ணக் கொடி இந்திய தேசியக் கொடியாக இருந்திருக்காது. ஒருவேளை அது காவிக் கொடியாகவோ, அதில் ஸ்வஸ்திக் அடையாளமோ இருந்திருக்கலாம். பிரிவினைக் காலத்தில் இந்தியாவுக்கு என்ன நடந்திருக்கும் என்று நமக்கு தெரிய வாய்ப்பில்லை. அத்தகைய ஆதிக்கம் செலுத்தும் இந்துத்துவா சூழலில் சூத்திரர்கள், தலித்துகள், ஆதிவாசி மக்களுக்கு அது என்ன அர்த்தமாக இருந்திருக்கும் என்றும் நமக்கு தெரியாது.

1942 ஆம் ஆண்டு இந்தியாவின் பட்டியல் சாதிகள் கூட்டமைப்பால் ஏற்றப்பட்ட கட்சியின் கொடிக்கு அம்பேத்கர் நீல நிறத்தை தேர்ந்தெடுத்தார். அது இப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் கொடி நிறமாக உள்ளது. தலித்துகளின் நிறமாகவும் உள்ளது.

நம்பிக்கை அளிக்கும் மூவர்ண கொடி

விவசாயிகள், சிஏஏ உள்ளிட்ட போராட்டங்களில் தேசியக் கொடிக்கான புதிய அர்த்தம் கிடைத்தது. ஆகஸ்ட் 15 நள்ளிரவில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட பிறகு, சூத்திரர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்துக்கு வேறு எந்த கொடியும் இல்லை. அவர்களுக்கு நம்பிக்கை தருவது தேசியக் கொடிதான். இந்த தேசியக் கொடி, வர்ண அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை மீதான பிடிப்பை உணர்த்துகிறது.

இந்திய தேசிய கொடியானது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் குறிக்கிறது – அரசியலமைப்பை உருவாக்கும் போது அம்பேத்கரும் மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திய இலட்சியங்கள் இவை. மேலே சொன்ன கோல்வால்கரின் கூற்றிலிருந்து, இன்று சூத்திரர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளின் உயிர்நாடியாக இருக்கும் இந்த இலட்சியங்களை அவர்கள் எவ்வளவு வெறுத்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்திய தேசியக் கொடியின் மேல் உள்ள ஆழமான காவி நிறம் மக்களின் புரட்சியைக் குறிக்கிறது. சாதி ஒடுக்குமுறை, சுரண்டல், தீண்டாமை மற்றும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அமைதியை நடுவில் உள்ள வெள்ளை நிறம் குறிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்வது போன்று பச்சை நிறம் இஸ்லாம் அல்ல. பயிர்களின் பசுமை, நேர்மறை, சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கை, மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு உணவு, வளர்ச்சி ஆகியவற்றை குறிக்கிறது. சமகால உலகம் இப்போது எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதனை குறிக்கிறது.

இந்தியாவின் உயிர்நாடி

நவீன இந்திய வரலாற்றில், விவசாயிகளின் உண்மையான பிரதிநிதியாக அறியப்படுபவர் ஜோதிராவ் பூலே. அவரது எழுத்துக்கள் அனைத்தும் விவசாயிகளின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டிருந்த. அவர்களை அவர் சூத்திரர்கள் மற்றும் ஆதி-சூத்திரர்கள் என்று அழைத்தார். அவரது புத்தகம் குலாம்கிரி, உற்பத்தி செய்யும் மக்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை பிரதிபலிக்கிறது. தேசியக் கொடியின் நடுவில் அசோக சக்கரத்தை வைத்து அதனை அம்பேத்கர் அங்கீகரித்தார். விவசாயப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் தேசநலனின் ஒரு பகுதியாக இதனை வைத்திருந்தனர்.

இந்தியாவின் அரசியலமைப்பு, தேசியக் கொடி, ஜனநாயக பாதுகாக்கப்பட வேண்டும்; அவை தொடர வேண்டும் – அவை இந்தியாவின் உயிர்நாடி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.