கெய்ரோ: எகிப்து நாட்டில் தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
எகிப்து நாட்டில் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று இம்பாபா. இங்கு மக்கள் அதிகம் செல்லும் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று புகழ்பெற்ற அபு செஃபைன் தேவாலயம்.
இந்த அபு செஃபைன் தேவாலயம் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் பலர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எகிப்து
இன்று வழக்கம் போல அபு செஃபைன் தேவாலயத்தில் மக்கள் கூடி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று அதிகப்படியானோர் அங்கு கூடி உள்ளனர். தேவாலயத்தில் அனைவரும் வழிப்படு கொண்டு இருந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொஞ்ச நேரத்திலேயே தேவாலயம் முழுவதும் தீ பற்றி எரியத் தொடங்கியது.
41 பேர்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் குறைந்து 41 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
என்ன காரணம்
இந்தத் தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் தேவாலயத்தின் ஜன்னல்களில் இருந்து தீ கொழுந்துவிட்டு எரிவதும், தீயணைப்பு வீரர்கள் பெரும் பாடுபட்டு அதை அணைக்க முயல்வதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது.
இரங்கல்
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, மீட்பு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தீ இப்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். தீயில் காயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
எகிப்து
சுமார் 10 கோடி மக்கள் தொகையைக் கொண்ட எகிப்து நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் காப்ட்ஸ் சமூக கிறிஸ்துவர்கள் ஆகும். சமீப ஆண்டுகளில் எகிப்து நாட்டில் பல மோசமான தீ விபத்துகள் அரங்கேறி உள்ளன. கடந்த மார்ச் 2021இல் கெய்ரோவின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் இறந்தனர். அதற்கு முன்பு, 2020இல் இரு மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.