நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்

சென்னை: நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி என்.கே.டி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் சங்கம் சார்பில் ‘வந்தே பாரதம்’ என்ற ஒலி, ஒளி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா சென்னை திருவல்லிகேணி என்.கே.டி. கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

தேச விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களை நினைவுகூர்ந்து, மரியாதை செலுத்த வேண்டும். விவசாயம் முதல் அறிவியல், மருத்துவம் வரை அனைத்துதுறைகளிலும் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்தும், தனித்தனியாகவும் பணியாற்ற வேண்டும். உலக அளவில் வலிமைவாய்ந்த நாடாக இந்தியா மாற, இளைஞர்கள் முழு உத்வேகத்துடன் சேவையாற்ற வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

தொடர்ந்து, எழுத்தாளர் கே.ஸ்ரீதரன் எழுதிய மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் நூல் வெளியிடப்பட்டது. விழாவில், ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் சங்கத் தலைவர் டி.ஏ.சம்பத்குமார், மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி, என்கேடி தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி செயலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்காட்சியில் காந்தி, பகத்சிங், பாரதியார், வ.உ.சி. வேலு நாச்சியார் உள்ளிட்டோரின் படங்கள், தகவல்கள் இடம்பெற்ற அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன. இக்கண்காட்சி நாளை (ஆக. 15) வரை திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள என்.கே.டி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.