பங்குச்சந்தை ஜாம்பவான், பெரும் தொழிலதிபர், இந்தியாவின் வாரன் பஃபட் என்றெல்லாம் அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார். அவருக்கு வயது 62. இன்று அதிகாலை வீட்டில் சரிந்து விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு இஸ்கிமிக் மாரடைப்பு ஏற்பட்டு அதில் அவர் உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்தனர்.
ராகேஷ் ஏற்கெனவே சிறுநீரகக் கோளாறுக்கும் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ராகேஷுக்கு மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். ராகேஷின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவும் பங்குச்சந்தை முதலீட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டயக் கணக்காளர் டூ பங்குச்சந்தை: மும்பையில் வருமான வரித்துறை அதிகாரயாகப் பணியாற்றிவந்த ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலாவின் மகன்தான் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வால. 1960ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷெகாவத் என்ற பகுதியில் பிறந்தார். 1985ல் ஷிதேனம் கல்லூரியில் பட்டம் பெற்றார். இந்திய பட்டயக் கணக்காளர் மையத்தில் சேர்ந்து பட்டயக் கணக்காளரானார்.
பின்னர் பங்கு முதலீட்டில் ஆர்வம் ஏற்பட்டு முதலீடு செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில் இவர் சிறிய அளவு முதலீடுகளைச் செய்தார். பின்னர் டைட்டன் பங்குகளில் இவர் முதலீடு செய்து பெரும் முதலீட்டாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். எந்த தருணத்தில் எங்கு முதலீடு செய்தால் லாபம் பெறலாம் என்பதைக் கணக்கிடுவதில் ராகேஷ் ஜாம்பவான். அதுவே அவர் இந்தத் துறையில் கோலோச்சக் காரணமாக இருந்தது.
தற்போது, ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. அண்மையில், ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ராகேஷ் ஜுன் ஜுன்வாலா தொடங்கினார்.
ஆகாசா ஏர்: கடந்த 2021 டிசம்பர் வாக்கில் குறைந்த கட்டணத்தில் இந்தியாவில் விமான சேவை வழங்கும் நோக்கில் ‘ஆகாசா ஏர்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பெருமளவு பங்குகளில் முதலீடு செய்துள்ளார். வினய் துபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர். இந்தியாவில் விமான போக்குவரத்து அடுத்து வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்ற கண்ணோட்டத்தில் ஆகாசா தொடங்கப்பட்டது.
பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல்:
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தன்னிகரற்றவர். அவர் புத்தி சாதுர்யம் மிக்கவர். எல்லாவற்றை உள்ளார்ந்து அலசி ஆராய்ந்து முடிவுகளை எடுப்பவர். நிதித்துறையில் அவர் அழியாத தடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அவர் இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்வதில் உணர்வுபூர்வமாக செயல்பட்டார். அவருடைய குடும்பத்தினருக்கும், அவர் மீது அன்பு கொண்டோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைந்துவிட்டார். அவர் முதலீட்டாளர். சவால்களை விரும்பி சமாளிப்பவர். பங்குச்சந்தை வர்த்தகத்தில் நிபுணர். தனது கருத்துகளை தெளிவாக எடுத்துரைக்கக் கூடியவர். அவர் தான் சார்ந்த துறையில் தலைவர். அவருக்கு எப்போதுமே இந்தியாவின் பலத்தின் மீதும் அதன் திறன்களின் மீது அபரிமித நம்பிக்கை உண்டு” என்று பதிவிட்டுள்ளார்.