மும்பை: பணமோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய மகாராஷ்டிராவின் மூன்று அரசியல் ஜாம்பவான்களும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம், அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கிடம் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பணமோசடி விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டார். இவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் அப்போதைய அரசில் அமைச்சராக இருந்த நவாப் மாலிக், நிழல்உலக தாதா தாவுத் இப்ராஹிம் தொடர்பான ஙபணமோசடி வழக்கில் கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். இவரும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் குர்லாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 1ம் தேதி பத்ரா சால் நில மோசடி வழக்கில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் கஸ்டடி விசாரணைகள் முடிவுற்ற நிலையில், தற்போது ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 22ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் இருப்பார். மேற்கண்ட மூன்று தலைவர்களும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, மூன்று தலைவர்களும் தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தொலைக்காட்சிகள், கேரம்கள், புத்தகங்கள், பிற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. நவாப் மாலிக் மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோருக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. ஆனால் அனில் தேஷ்முக்கு வீட்டில் சமைத்த உணவை வழங்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவையே அனில் தேஷ்முக் சாப்பிடுகிறார். மகாராஷ்டிரா அரசியலில் ஜாம்பவான்களாக இருந்த மூன்று தலைவர்களும் ஒரே சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.