மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணனை பாஜகவில் இருந்து நீக்கி தமிழக பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது திமுக – பாஜக இடையே நடைபெற்ற மோதலை அடுத்து மதுரை விமான நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினார்கள், இச்சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு நிதியமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும், நிதியமைச்சர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் போராட்டம் நடத்துவோம் என மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று இரவு நிதியமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த டாக்டர் சரவணன் மன்னிப்பு கேட்டதோடு பாஜகவில் இருந்த விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், பாஜக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM