பாஜகவுக்கு அடுத்த ஷாக்; தலைவரை தட்டி தூக்கியது போலீஸ்!

இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கடந்த 11ம் தேதி தமிழக பாஜக சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது.

இந்த பாதயாத்திரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில துணை தலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டார்.

அப்போது பாப்பாரப்பட்டி பழைய பஸ் நிலையத்தில் இருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரையில் ஊர்வலமாக பாஜகவினர் சென்றனர். இதை தொடர்ந்து தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாரத மாதா ஆலயத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்ய முடிவு செய்தனர்.

ஊழலற்று செயல்பட்ட தன்னை பாஜக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – நடிகர் எஸ்வி சேகர்

ஆனால், பாரத மாதா ஆலயம் பூட்டி வைக்கப்பட்டிருந்ததால் பாஜகவினரால் உள்ளே செல்ல முடியவில்லை. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசிடம் பாரதமாதா கோயிலை திறக்குமாறு பாஜகவினர் உத்தரவிட்டுள்ளனர்.

பா.ஜ.கவினர் அங்கு அதிகளவில் இருந்ததால், வெளியில் நின்று வழிபாடு செய்து விட்டு கலைந்து செல்லுமாறு காவல் துறையினர், கோயில் நிர்வாக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் தலைமையிலான பாஜகவினர் திடீரென கோயில் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்பட 50 பேர் மீது, பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பாஜக ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய தலைவர் சிவசக்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் மௌன குரு, முன்னாள் நகரத் தலைவர் மணி ஆகியோரை நேற்று இரவே போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், இன்று ராசிபுரத்திலுள்ள வீட்டில் இருந்தபோது, கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் திடீரென மேற்கொண்டிருக்கும் அதிரடி நடவடிக்கையானது தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி பாஜ சிக்கலில் மாட்டி உள்ளது. இந்நிலையில் பட்டப்பகலில் பாரத மாதா கோயிலின் பூட்டை உடைத்து கட்சியின் மாநில துணை தலைவர் கைது ஆகி இருப்பது பாஜவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகவே உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.