பீகாரில் நடந்த அரசியல் நகர்வுகளை சற்றே திரும்பிப் பார்ப்போம். கடந்த 2020-ம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மறுபுறம் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
பீகார் சட்டப்பேரவையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 45 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. ராஷ்டிரிய ஜனதா தளம் இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட அதிக இடங்களில் வென்று பாஜக அக்கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது. இதில், லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வானை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது பாஜக. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற லோக் ஜன சக்தி கட்சி, பீகார் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெறாமல் தனித்துப் போட்டியிட்டது. அதிலும் பாஜக நின்ற இடங்களைத் தவிர்த்து, ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட இடங்களில் மட்டும் லோக் ஜன சக்தி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் வாக்குகள் பிரிந்து நிதிஷ்குமார் கட்சி 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
இதன் காரணமாக, பாஜக – ஐக்கிய ஜனதா தளம் இடையே தொடக்கம் முதலே பனிப்போர் நிலவி வந்தது. இருப்பினும், அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாரே பதவியேற்றார். ஆனால், ஆட்சியில் பாஜகவின் கை ஓங்கி வந்தது. நிதிஷ்குமாரின் எதிர்ப்பை மீறி, விஜய் குமார் சின்ஹா சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவர் நிதிஷ்குமார் அரசை வெளிப்படையாக விமர்சித்தது நிதிஷ்குமாரின் அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது. இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை எம்.பியான ஆர்.சி.பி.குமார் சிங்கின் பதவிக்காலம் கடந்த 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால் அவர் வகித்து வந்த மத்திய உருக்குத்துறை அமைச்சர் பதவி பறிபோனது. அண்மையில் கட்சியில் இருந்து விலகிய அவர், ஐக்கிய ஜனதா தளம் ஒரு மூழ்கியக் கப்பல் என விமர்சித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு திரட்ட பாஜக நடத்திய கூட்டத்தில் சிராக் பாஸ்வான் அழைக்கப்பட்டதும், நிதிஷ் குமாரை அதிருப்தி அடைய வைத்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன், தங்களது கட்சியை பலவீனப்படுத்த சதித்திட்டம் தீட்டப்படுவதாகக் பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல், குற்றம் சாட்டினார். மேலும் தகுந்த நேரத்தில் அவர்களை அம்பலப்படுத்துவோம் என்றும் ராஜீவ் ரஞ்சன் கூறினார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாட்னாவில் அண்மையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா, பீகாரின் 243 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 17-ம் தேதி நடைபெற்ற பாஜக கூட்டணி ஆளும் மாநில முதலமைச்சர்கள் கூட்டம், கடந்த 22-ம் தேதி குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓய்வு பெரும் நாளன்று நடைபெற்ற விருந்து, குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற நிகழ்ச்சி ஆகிய 3 நிகழ்ச்சிகளிலும் நிதிஷ்குமார் பங்குபெறவில்லை.
கூட்டணியில் நீடித்தாலும் சிஏஏ, என்ஆர்சி, அக்னி பாதை திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள், திட்டங்களுக்கு முதல்வர் நிதிஷ் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் நடத்திய இப்தார் நிகழ்வில் பங்கேற்று அவர் பாஜகவை பகிரங்கமாக மிரட்டினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொடர்பு கொண்டு நிதிஷ்குமார் பேசியதாக வெளியான தகவல், அவர் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள உள்ளதை உறுதி செய்தது. ஆளுநர் பாகு சவுகானை நேற்று நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பீகாரில் ஆட்சி அமைப்பதற்கு 122 இடங்கள் தேவைப்படும் நிலையில், 164 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை நிதிஷ்குமார் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, பீகாரின் முதலமைச்சராக 8-வது முறையாக பதவியேற்கவுள்ளார் நிதிஷ்குமார். தேஜஸ்விக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நிகழ்த்தியதை, பாஜக பீகாரிலும் நிகழ்த்த முயல்வதாக உணர்ந்த நிதிஷ்குமார், முன்னதாகவே கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளார். எவ்வாறாயினும், நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் நிகழ்ந்துள்ள இந்த கூட்டணி மாற்றம், எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ