பானையில் இருந்த குடிநீரை குடித்ததால் ஆசிரியர் தாக்கியதில் தலித் மாணவன் பலி; ராஜஸ்தான் பள்ளியில் வன்கொடுமை

ஜலோர்: ராஜஸ்தானில் பள்ளியில் இருந்த குடிநீர் பானையில் இருந்த தண்ணீரை குடித்த தலித் மாணவரை ஆசிரியர் அடித்து தாக்கியதில் அந்த மாணவர் பலியானார். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது தலித் பள்ளி மாணவன், கடந்த ஜூலை 20ம் தேதி தான் படிக்கும் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் பானையில் இருந்து தண்ணீரை குடித்தார். இதைப் பார்த்த பள்ளி ஆசிரியர் சைல் சிங், மாணவனை திட்டியது மட்டுமின்றி அவனது கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சியடைந்த மாணவன், அதே இடத்தில் மயக்கமடைந்த நிலையில் கீழே விழுந்தார். அதையடுத்து அந்த மாணவனை அங்கிருந்த சக ஆசிரியர்கள் மீட்டு ஜலோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவன் இறந்தான்.  இவ்விவகாரம் தொடர்பாக ஆசிரியர் சைல் சிங் மீது கொலை மற்றும் எஸ்சி-எஸ்டி சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். ெதாடர்ந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து ஜலோர் எஸ்பி ஹர்ஷ் வர்தன் அகர்வாலா கூறுகையில், ‘ஆசிரியரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாணவன், அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார். பள்ளியில் வைக்கப்பட்ட குடிநீர் பானையானது, உயர் சாதி மாணவர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டதாகவும், அதில் இருந்த குடிநீரை இறந்த மாணவன் குடித்ததற்காக அவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். மாணவனின் உடலை பெற்று வர, அகமதாபாத்திற்கு போலீஸ் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது’ என்றார். இச்சம்பவம் குறித்து மாணவனின் தந்தை தேவாரம் மேக்வால் கூறுகையில், ‘கடந்த ஜூலை 20ம் தேதி, ஜாலோரில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் எனது மகன் இந்திர குமார், உயர்சாதி மாணவர்களுக்காக வைக்கப்பட்ட மண் பானையிலிருந்து தண்ணீரைக் குடித்ததால், ஆசிரியர் சைல் சிங்கால் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எனது மகனின் வலது காது மற்றும் கண்ணில் காயம் ஏற்பட்டிருந்தது. சைலா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியரை கைது செய்துள்ளனர். ஆனால், எனது மகன் இறந்துவிட்டார்’ என்று சோகத்துடன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.