தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா நினைவாலயத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி, பாஜக சார்பில் பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா நினைவாலயத்தில் பாரதமாதா திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்க பேரணியாக சென்றனர்.
பாரதமாதா திருவுருவச்சிலை அமைந்துள்ள நினைவாலயத்தில் முன்புறம் உள்ள கதவு பூட்டி இருந்த நிலையில் பாஜகவினர் அந்த பூட்டை திறக்க சொல்லி அங்கே வேலை செய்யும் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணியாளர் பூட்டை திறக்க மறுத்ததால் பாரதமாதா நினைவாலய கதவின் பூட்டை உடைத்து பாரதமாதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.
போலீசார் இந்த வழக்கில், முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கத்தை ராசிபுரத்தில் கைது செய்தனர். அங்கிருந்து அழைத்து வந்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் நீதிபதியிடம் உடல்நிலை சரியில்லை என கூறியதையடுத்து பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு ரத்தம் அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், கே.பி. ராமலிங்கம் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப பரிந்துரை செய்தனர். பின்னர், காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”