பிடிஆர் கார் மீது தாக்குதல்: அநாகரிகத்தின் உச்சம்.. பாஜகவுக்கு சீமான் கண்டனம்!

தமிழக நிதி அமைச்சரை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

காஷ்மீரில் வீர மரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு, நேற்று அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்டோரை போலீசார் நேற்று கைது செய்த நிலையில், மேலும் 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி, அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் ஐயா பழனிவேல் தியாகராஜன் அவர்களை குறிவைத்து காலணி வீசியுள்ள பாஜகவினரின் அநாகரிகச்செயல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வட மாநிலங்களில் காலங்காலமாக கடைபிடித்து வரும் வன்முறை அரசியல் வெறியாட்டத்தை தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல நுழைக்க முயலும் பாஜகவினரின் தரம் தாழ்ந்த போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்திய பெருநாட்டின் ஆகச்சிறந்த தேசப்பக்தர்களாக தங்களுக்கு தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாஜகவினர், நாட்டிற்காக இன்னுயிர் இழந்த இராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செலுத்தும் இடத்தில் திட்டமிட்டு வீண்மோதலை தூண்டியிருப்பது வெட்கக்கேடானது. மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சரை வழிமறித்து காலணி வீசியதன் மூலம் நிதியமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் மட்டும் பாஜக அவமதிக்கவில்லை. நாட்டிற்காக உயிர்நீத்த வீரரின் தியாகத்தையும் அற்ப அரசியலுக்காக பாஜக கொச்சைப்படுத்தி விட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.