மும்பை: பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரும், இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62. ஜுன்ஜுன்வாலா மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு, சக்கர நாற்காலியிலேயே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், உடல் நலக்குறைவால் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் மாரடைப்பால் காலமானார். ஜுன்ஜுன்வாலாவுக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு நேற்று மாலை நடந்தது. ராஜஸ்தானி குடும்பத்தை சேர்ந்த ஜுன்ஜுன்வாலா, மும்பையில் வளர்ந்தவர். கடந்த 1985ம் ஆண்டு தனது 25வது வயதில் ஜுன்ஜுன்வாலா பங்குச்சந்தையில் முதல் முறையாக முதலீடு செய்தார். தனது உறவினரிடம் ரூ.5000 பணத்தை கடன் வாங்கி அதை முதலீடு செய்தார். 1986ம் ஆண்டு டாடா டீ ஒரு பங்கு ரூ.43க்கு வாங்கினார். 3 மாதத்தில் அது ரூ.143 ஆக அதிகரித்தது. இதனால், நல்ல லாபம் பார்த்த ஜுன்ஜுன்வாலா, பங்குச்சந்தையில் 3 ஆண்டில் ரூ.25 லட்சம் சம்பாதித்தார். எதிலும் ரிஸ்க் எடுக்கத் தயங்காதவரான இவருக்கு பங்குச்சந்தையில் தொட்டதெல்லாம் பொன்னானது. இதன் மூலம், தற்போது ரூ.46 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக உள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார். டைட்டன், ஸ்டார் ஹெல்த், ராலீஸ் இந்தியா, எஸ்கார்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீட்டாளராக உள்ளார்.சமீபத்தில் இவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து ஆகாசா ஏர் எனும் மலிவு விலை டிக்கெட் விமான நிறுவனத்தை தொடங்கினார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.