பெங்களூரு:
போக்குவரத்து வசதிகள்
பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் 75 மின்சார பஸ்கள் சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த பஸ்களின் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
பெங்களூரு வளர்ச்சி பெற அனைத்து துறைகளிலும் சரியாக வேண்டும். போக்குவரத்து வசதிகள் மட்டும் அதிகமாக இருந்தால் போதாது. பி.எம்.டி.சி.க்கு தற்போது மாநில அரசு ரூ.270 கோடி மானியம் வழங்குகிறது. அந்த கழகத்திற்கு அரசு சமீபத்தில் ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அதன் ஊழியர்களுக்கு அரசே சம்பளம் வழங்கியது. கடந்த 3 ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அரசு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி அளித்துள்ளது.
சீர்திருத்தம்
இதே போல் அரசால் நிதி உதவி வழங்க இயலாது. அரசு போக்குவரத்து கழகங்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைய வேண்டும். போக்குவரத்து கழகங்களில் சீர்திருத்தம் கொண்டுவர ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சீனிவாசமூர்த்தி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசுக்கு அறிக்கை வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறைகள் தன்னிறைவு அடைந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும். அதனால் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும். மின்சாரத்துறைக்கு ஆண்டுக்கு ரூ.14 ஆயிரம் கோடி மானியம் வழங்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து துறையின் பங்கு முக்கியமானது.
பொருளாதார பலம்
பெங்களூருவில் மக்கள்தொகை 1.25 கோடி. அதே எண்ணிக்கையில் வாகனங்களும் உள்ளன. இன்னும் 3 ஆண்டுகளில் மக்கள்தொகையை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். பெங்களூருவில் தினமும் புதிதாக 5 ஆயிரம் வாகனங்கள் வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கிறது. பி.எம்.டி.சி.யை பொருளாதார ரீதியாக பலமான அமைப்பாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. பெங்களூருவில் முழுமையாக வளர்ச்சியை ஏற்படுத்த ஒரு புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, பி.எம்.டி.சி. ேபாக்குவரத்து பி.எம்.டி.சி. தலைவர் நந்தீஸ்ரெட்டி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.