சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணமாக ரூ.10 ஆயிரம் மற்றும் புத்தகப் பைகளை வழங்கி உள்ளார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “தமிழகம் முழுவதும் நான் சுற்றிச் சுழன்று பணியாற்றி வந்தாலும், என்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது, நான் என்னை அறியாமல் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை அறிவித்தார்.
இதில், நான் கோரிக்கை வைக்காமலேயே பத்தில் ஒரு கல்லூரியை நம்முடைய தொகுதிக்கு அமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்.
அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2021 நவம்பர் 2-ம் தேதி நான் தொடங்கி வைத்தேன். இந்தக் கல்லூரி பி.காம். பிபிஏ. பிசிஏ. பிஎஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 4 பாட பிரிவுகளுடன் தொடங்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டில் 2021 டிச.3-ம் தேதி சைவ சித்தாந்தம் படிப்புக்கான புதிய வகுப்பு 100 மாணவர்களுடன் தொடங்கி வைக்கப்பட்டது.
முதலாம் ஆண்டில் 220 மாணவர்கள் சேர்ந்தநிலையில், அவர்களுக்கு கட்டணமில்லாமல் முதலாம் ஆண்டு படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மொத்தம் இருக்ககூடிய 240 இடங்களுக்கு 1,089 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், ஐந்தில் ஒருவருக்குத்தான் இடம் தர முடியும் என்ற அளவுக்கு இக்கல்லூரி மிகக் குறுகிய காலத்தில் செல்வாக்கை அடைந்துள்ளது.
இன்று இந்தக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டுக் கல்வியை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன.
மாணவர்கள் ஒரே ஒரு பட்டத்தோடு படிப்பை நிறுத்திக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியைத் தொடருங்கள். குறிப்பாக பெண்கள், பட்டம் வாங்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல், தகுதியான பணிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.