பெரியார் பாணியில் பிடிஆர்: செருப்புக்கு பின்னால் இருக்கும் வெறுப்பு அரசியல்!

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் உடலுக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்திவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பாஜகவினர் அவரை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினார். அப்போது, மகளிரணியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீசிய செருப்பு அமைச்சர் கார் மீது விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். தனது கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “ராணுவ வீரரை நல்லடக்கம் செய்த இந்நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை. அதற்கு இது சரியான தருணம் இல்லை. இது போன்ற அரசியல் செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.” என்றார். ‘ஊரெல்லாம் தேசியக்கொடி ஏற்றவேண்டிய நேரத்தில், தேசியக்கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பாஜகவின் கீழ்த்தர அரசியலை தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.” என்று அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று நடந்த சம்பவத்தைப் பற்றி பிறகு கூறுவதாக தெரிவித்துள்ள பிடிஆர், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் தன்னுடைய கட்சி உறுப்பினர்களுடன் எப்படி அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்த செருப்பை திரும்பப்பெற விரும்பினால் அப்பெண் பெற்றுக்கொள்ளலாம். என்னுடைய ஊழியர்கள் அதை பத்திரமாக வைத்திருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுகிறேன். ஆனால் இப்போதைக்கு…. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு சில நூறு மீட்டர்களுக்கு தனது கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட காணாமல் போன ‘பழைய விமான முணையத்தின் சிண்ட்ரெல்லா’ தனது செருப்பு மீண்டும் வேண்டும் என நினைத்தால், அவருக்காக எனது உதவியாளர் அதனை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார்’” என்று பதிவிட்டுள்ளார்.

கோபத்தை வெளிக்காட்ட, எதிர்ப்பைப் பதிவு செய்ய, வெறுப்பை உமிழ, ஒருவரை அசிங்கப்படுத்த, அதிக்க சாதியினரின் உரிமையாக, ஒடுக்கப்பட்டோரின் ஏக்கமாக என காலில் போட்டு நடக்க மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட செருப்புக்கு பின்னால் இருக்கும் அரசியல் நீண்ட வரலாறு கொண்டது. செருப்பு பிஞ்சிரும், நீயெல்லாம் என் செருப்புக்கு சமம் என்பன போன்ற சொல்லாடல்களில் இருந்து, காலில் போடும் செருப்பு எவ்வளவு தாழ்வாக கருதப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆதிக்க சாதியினர் போடும் செருப்பை, ஒடுக்கப்பட்டவர்களும், பெண்களும் போடக் கூடாது என்ற எழுதப்படாத விதி இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் செருப்பு அணிந்து பொதுவில் நடக்கத் தடையும், அப்படியும் அணிந்து வருபவர்கள், ஆதிக்க சாதிக்காரர்கள் எதிரே வரும் பொழுது அதைக் கழட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, அவர்கள் கடந்த பிறகே போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் இருந்தது. எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட அசுரன் திரைப்படத்தில் இதனை சுட்டிக்காட்டியிருப்பர். ‘செருப்பு என்ன முதலாளி மட்டும்தான் போடணுமா இது இந்த சிவசாமி பொண்டாட்டிக்கு.’ என்று நாயகன் செருப்பு தைப்பவரிடம் கேட்பதில் ஒடுக்குமுறையின் அளவை நாம் புரிந்து கொள்ள முடியும். செருப்பு உரிமையாக பார்க்கப்பட்டது.

தமிழகத்துக்கும் செருப்புக்குமான அரசியலுக்கு மிகவும் நெருங்கிய தொடர்புண்டு. செருப்புப் போடும் உரிமையை பெற்றுத் தந்தவர்களில் முக்கியமானவர் தந்தை பெரியார். எனவேதான், அவரை அசிங்கப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அவரது சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்து விருகின்றனரோ என்னவோ. ஆனால், செருப்பு வீச்சை நேரிலேயே எதிர்கொண்டவர் பெரியார். ஒரு முறை கடலூரில் ரிக்சாவில் போய்க் கொண்டிருந்த
பெரியார்
மீது செருப்பு வீசப்பட்டது. ரிக்சாவில் விழுந்த அந்த செருப்பைக் கையில் எடுத்து கொண்டு, ரிக்சாவைத் திருப்பச் சொல்லி, மற்றொரு செருப்பைத் தேடி எடுத்து, ஜோடியாக இருந்தால் இந்த செருப்பு பயன்படுமே என்றார் அவர். அதே இடத்தில் அவருக்கு சிலைக்கு வைக்கப்பட்டு, சிலையின் பீடத்தில் ‘செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்’ என்று கவிஞர் கருணானந்தம் எழுதிய வரிகளும் செதுக்கப்பட்டது.

சேலத்தில் நடந்த செருப்பு வீச்சு சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அதனை துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். உண்மைக்கு புறம்பாக ஆதாமின்றி பேசியதற்கு எதிராக அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஊர்வலத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி பெரியாரே விளக்கியிருக்கிறார். அதுதான் அவரது ஸ்டைல்.

“டேய் இங்க வாடா வந்து செருப்ப கழட்டி விடுடா” என்று நீலகிரியில் நடைபெற்ற விழாவுக்குச் சென்றிருந்தபோது, அதிமுக முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழங்குடியின சிறுவனிடம் சொன்னது பெரும் சர்ச்சையானது. அதன்பிறகு அவர் மன்னிப்பு கேட்டார். இதிலிருந்து காலில் போட்டு நடக்க மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட செருப்பு, இந்த சமூகத்தில் எப்படியெல்லாம் தாழ்வாக கருதப்படுகிறது, இழிவுபடுத்த, வெறுப்பை உமிழ பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கைகளில் எடுத்த செருப்பை கக்கத்தில் வைக்காமல், கால்களில்தான் போட வேண்டும் என்று உரிமையுடன் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது நமக்கு. ஆனால், இன்னமும் கைகளில் வைத்துக் கொண்டு வெறுப்பு அரசியல் செய்ய வெட்கப்பட வேண்டும். செருப்பு வெறும் உடமை மட்டுமல்ல; அதற்கு பின்னால் வலி நிறைந்த வரலாறு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.