புதுடில்லி: பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என சுதந்திர தின உரையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறி உள்ளார்.
75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது: இந்த அற்புதமான நாளில் உங்களிடம் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நாட்டிற்காக தியாகம் செய்த அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் நான் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி.சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு அளப்பரியது.
நமது மூவர்ண தேசிய கொடி நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் பறக்கிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் பிராந்திய வீரர்களாக மட்டுமல்லாது நாட்டின் அடையாளமாக விளங்குகின்றனர். இந்தியா ஒரு போதும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை மறக்காது. 2047 ம் ஆண்டில் நமது அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கி இருக்க வேண்டும்.
இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்துள்ளது. பல தடைகளை தாண்டி பெண்கள் முன்னேறி வருகின்றனர். அரசியலில் அவர்களின் பங்களிப்பு ஆரோக்கியமானது. போர் விமானி முதல் விஞ்ஞானிகள் வரை பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். .200 கோடி தடுப்பூசி செலுத்தி வளர்ந்த நாடுகளை விட பல மடங்கு முன்னேறி இருக்கிறோம். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை கொண்டு மிகப்பெரிய சாதனை செய்துள்ளோம்.
கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் பொருளாதார பிரச்னைகளில் சிக்கி தவித்த போது இந்தியா அச்சூழலில் இருந்து விரைவில் மீண்டது. மீண்டு வரும் நமது பொருளாதாரம் ஏழைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பேருதவியாக இருக்கிறது. உலகில் வேகமாக முன்னேறும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது.பொருளாதார வளர்ச்சி மூலம் ஏழைகளின் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து தரப்புக்கும் வளர்ச்சி வாய்ப்புகளை அளிக்கும் வகையில் இந்தியா செயல்பட்டு வருகிறது.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பொருளாதார நிலையை உணர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வி பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நல்லாட்சிக்கான மாற்றங்களாகும். புதிய இந்தியாவின் தன்னம்பிக்கையாக இளைஞர்கள் பெண்கள் விவசாயிகள் திகழ்கின்றனர். டிஜிட்டல் துறையில் நாட்டின் வளர்ச்சி பாராட்டுக்குரியது. நம்மிடம் உள்ள வளங்கள் எல்லாம் இந்த நாடு நமக்கு தந்தது அதை காப்பது நமது கடமை.எதிர்கால சந்ததியினருக்காக இயற்கையை பாதுகாப்பது நமது கடமை.நாட்டு மக்கள் அனைவருக்கும் வளமானவாழ்வு அமைய வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement