சென்னை: “அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக சரிவர நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தங்களது கடமைகளிலிருந்து தவறியதன் காரணமாகவே போதைப் பொருட்களின் பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்துவிட்டது என்பது தற்போதைய அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளிலிருந்து தெரியவருகிறது.
போதைப் பொருட்களின் புழக்கம் கடந்த அதிமுக ஆட்சியின் போது கட்டவிழ்த்து விடப்பட்டதால் அதனுடைய பாதிப்பு தற்போதும் தொடர்கிறது” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழகத்தில், கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் பொருட்டு 01.01.2021 முதல் 31.07.2021 வரையிலான காலகட்டத்தில் 3,555 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 164 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 01.01.2022 முதல் 31.07.2022 வரையிலான காலகட்டத்தில் 5,028 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 339 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைகள் 106.71 விழுக்காடு இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளன.
மேலும், இதே காலகட்டத்திற்கான கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டு 2021-ஆம் ஆண்டு 406 ஆக இருந்த எண்ணிக்கை, 2022-ஆம் ஆண்டு 76 விழுக்காடு அதிகரித்து 715 பேர் தண்டனை பெற்றனர். மேலும், 11894.99 கிலோ கஞ்சா 2021-ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதே காலகட்டத்தில் 2022-ஆம் ஆண்டு 16158.055 கிலோ என அதிகரித்தது.
மேலும், கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கம் 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 102ஆக இருந்தது. இதே காலகட்டத்தில் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 2,922 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், 2021-ஆம் ஆண்டு 77 வழக்குகளில் சொத்துக்கள் முடக்கப்பட்டன. ஆனால், 2022 ஆம் ஆண்டு 118 வழக்குகளில் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
எனவே, கடந்த 2011 முதல் 2021 வரை (மே மாதம் வரை) சமூகமெங்கும் நீக்கமற வியாபித்து கொடிகட்டி பறந்த கஞ்சா விற்பனையை திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது அளிக்கப்பட்ட புள்ளி விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இதில் எதையும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல், மேலெழுந்த வாரியாக குற்றச்சாட்டுக்களை பழனிசாமி அள்ளி வீசுவதால், தங்களது அடிமை அரசின் 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் செழித்து வளர்ந்தோங்கிய கஞ்சா விற்பனையை கடுமையான நடவடிக்கைகளின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியை விமர்சிக்க பழனிசாமிக்குத் தகுதியில்லை.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021 (ஏப்ரல் வரை) கையாளாகாத அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 14 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு பார்த்தாலே மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு புரியும்.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை (மே மாதம் வரை) 4 ஆண்டுகளில் 917 பேர் மீது மட்டுமே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், கடந்த 14 மாதங்களில் மட்டும் 891 மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்தே காவல்துறையினர் சிறப்பாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டுள்ளனர் என்பதில் ஐயமில்லை. அரசியல் கட்சியினர் தலையீடு இருப்பதாக பழனிசாமி கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதும் விளங்கும்.
இதேபோன்று கஞ்சா வழக்குகளில் தண்டனை பெற்றுத்தருவதில் 2022-ஆம் ஆண்டு 76.11 விழுக்காடு அதிகரித்துள்ளது. கஞ்சா பறிமுதல் செய்ததில் 35.84 விழுக்காடு 2022-ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. இது பெருமைப்படக்கூடிய செய்தி அல்ல என்ற போதிலும், கடந்த 10 ஆண்டுகளில் கட்டுப்பாடற்ற விற்பனையின் தொடர்ச்சி தற்போதும் காணப்படுவதாகவும், அதனை களையெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நடவடிக்கையின் காரணமாகவே பறிமுதல் செய்யப்படும் கஞ்சாவின் அளவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக சரிவர நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தங்களது கடமைகளிலிருந்து தவறியதின் காரணமாக போதைப் பொருட்களின் பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்துவிட்டது.
தற்போது இவ்வரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளிலிருந்து தெரிய வருகிறது. இப்போதைப் பொருட்களின் புழக்கம் கடந்த அதிமுக ஆட்சியின் போது கட்டவிழ்த்து விடப்பட்டதால் அதனுடைய பாதிப்பு தற்போதும் தொடர்கிறது.
இதற்கு முந்தைய அரசின் சரியான திட்டமிடா தன்மையும், அவற்றை முறையாக அமல்படுத்தாததுமே காரணங்களாகும். சமூகத்தில் புரையோடிப் போய்விட்ட இப்போதை பழக்கத்தினை அடியோடு ஒழிக்க இவ்வரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கிடைக்கப் பெறும் தரவுகள் உண்மை நிலையை பிரதிபலிக்கின்றன.
கஞ்சா விற்பனையை பொறுத்தவரை, போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம் 1985-இன் படி கஞ்சா விற்பனையை ஒழிக்கும் நோக்கில் அதில் ஈடுபடுபவரின் சொத்துக்களை பறிமுதல் செய்வதிலும், அவர்களது வங்கிக் கணக்கை முடக்குவதிலும் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த அடிமை அரசின் ஆட்சிக்காலத்தில் “எரிகிற கொள்ளியில் எதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்” என்ற பழமொழி தெரிந்திருந்தும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களின் ஆணிவேரை பிடுங்கி எறியாமல், தண்ணீர் விட்டு வளர்த்தது போன்று சட்டத்தில் இடமிருந்தும் பறிமுதல் செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருந்ததன் விளைவே கஞ்சா விற்பனை பல்கி பெருகியதற்கு காரணம் என்றால் அது மிகையாகாது.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021 வரை (மே மாதம் வரை) கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரின் வெறும் 128 வங்கிக் கணக்குகள் மட்டுமே முடக்கப்பட்ட நிலையில், கடந்த 14 மாத கால ஆட்சியில் மட்டும் 3,363 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021 வரை (மே மாதம் வரை) கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது பதிவு செய்யப்பட்ட வெறும் 135 வழக்குகளில் மட்டுமே சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 14 மாத கால ஆட்சியில் மட்டும் 332 வழக்குகளில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இப்புள்ளி விவரங்களை பழனிசாமி அவர்களிடம் யாராவது எடுத்துக் கூறினால் நலமாக இருக்கும். ஏனெனில், கட்சி தன்னிடம் இருக்குமோ, இருக்காதோ, பன்னீர்செல்வம் போன்று வேறு யாரேனும் தந்திரம் ஏதேனும் செய்கின்றனரா, பல்வேறு அமைச்சர்கள் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் வழக்குகளில் பதிவு செய்துள்ள நிலையில், தனக்கு மேலே தொங்கும் கத்தி எப்போது விழுமோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் அவருக்கு இப்புள்ளி விவரங்களை எடுத்துக் கூறினால் புரிந்து கொள்வார். அல்லது புரிந்தும் புரியாதது போல நடிப்பார்.
அதிமுக அரசின் அமைச்சரவையில் போதைப் பொருளின் பெயரை பட்டமாக கொண்ட குட்கா பாஸ்கர் மீது ஒன்றிய புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்ட போதிலும், தொடர்ந்து அமைச்சரவையில் “பங்கு” பெற வைத்தும், “பங்கு” பெற்றும் பங்களிப்புச் சாதனை புரிந்தவர் பழனிசாமி என்பதையும் அவருக்கு யாராவது நினைவூட்டலாம்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா ஊழலில் தனது அமைச்சரவையில் இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், தனது துறையிலிருந்த போலீஸ் டிஜிபிக்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மீது சிபிஐ அமைப்பே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவிருக்கின்ற நிலையில் கூட- தன் ஆட்சியில் நடைபெற்ற குட்கா மாமூல், மாதாந்திர ஊழல் வசூல் எல்லாவற்றையும் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் பழனிச்சாமி அவர்களுக்கு “போதைப் பொருட்களை தடுக்க” தீவிர நடவடிக்கை எடுக்கும் எங்கள் கழகத் தலைவரை, முதலமைச்சரை குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது?
எனவே, போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை அறவே ஒழிக்கவும் அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு துணை புரியாவிட்டாலும், முட்டுக்கட்டை போடுவதையாவது எதிரக்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் உள்ள பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஒழிப்பு என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கான நன்மை என்பதுடன், ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் உடல்நிலை சார்ந்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது. அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல துறைகளும் இதில் தமிழக முதலமைச்சரின் சீரிய பணியில் ஒருங்கிணைந்து நிற்கின்றன. வெற்று ஊளையிடும் பழனிசாமியின் அரசியல் நரித்தனம் ஒருபோதும் எடுபடாது” என்று அவர் கூறியுள்ளார்.