சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் மதமாற்ற தடை சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதலே மத மாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது. சட்ட விதிகளை கடுமையாக்கி கடந்த 2019-ம் ஆண்டில் புதிய சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் மாநில சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்க முடியும்.
இந்த சூழலில் மத மாற்ற தடை சட்டத்தில் மேலும் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டு புதிய சட்ட திருத்த மசோதா இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் கட்டாய மதமாற்றத்துக்கு காரணமானவர்களுக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஒரே நேரத்தில் 2 பேருக்கு மேற்பட்டோர் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டால் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும். மத மாற்றம் தொடர்பான புகார்களை உதவிஆய்வாளர் மற்றும் அதற்கு மேல்நிலையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும். செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற வேண்டும் என்று புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.