”மனநலம் பாதிக்கப்பட்டவனா?”.. உணவின் தரத்தை குறைகூறிய உபி காவலருக்கு கட்டாய பணி விடுப்பு.!

12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள் ஆனால் தரமற்ற உணவை வழங்குகிறார்கள் என்று உணவின் தரம் குறித்து குறைகூறிய உத்திர பிரதேசத்தை சேர்ந்த காவலருக்கு கட்டாய பணி விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் காவலராக பணிபுரிந்து வரும் மனோஜ் குமார் என்பவர் தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து விமர்சனம் செய்து அழுதபடி பேசிய வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது. காவலர் மனோஜ் குமார் அந்த வீடியோவில், “ஒரு நாய் கூட இந்த உணவை சாப்பிட முடியாது. ஆனால் இதைத்தான் எங்களுக்கு உணவாகக் கொடுக்கின்றனர். இது மூத்த காவல்துறை அதிகாரிகளின் மோசடி. இவர்கள் மோசடி காரணமாகவே காவல்துறையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுகிறது.
மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் காவல்துறையினருக்கு சத்தான உணவு வழங்குவதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் சுமார் 30 சதவீதம் உயர்த்தப்படும் என உறுதியளித்த போதிலும் இந்த தரமற்ற உணவுகள் வழங்கப்படுகின்றன. நான் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன். இது குறித்து பலமுறை டிஜிபியிடம் கூறியும் தீர்வு கிடைக்கவில்லை” என அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி விவாதப்பொருளானது.

நாய் கூட இத சாப்பிடாது...சாப்பாடு தட்டுடன் காவலர் கண்ணீர் -வைரலாகும் வீடியோ
இது குறித்து பேசியிருந்த உ.பி காவல்துறை மெஸ் மேலாளர், “தேவையற்ற புகாரை அவர் எழுப்புகிறார். அழுவது அவரது வழக்கமான பழக்கம்” என்று தெரிவித்து இருந்தார். இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி உத்தரவிட்டார். உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய வட்ட அதிகாரி அபிஷேக் ஸ்ரீவஸ்தவாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், உணவின் தரம் குறித்து குறைகூறிய உத்திர பிரதேசத்தை சேர்ந்த காவலர் மனோஜ்-க்கு நீண்ட நாட்களுக்கு கட்டாய பணி விடுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய காவலர் மனோஜ், தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி பணியை விட்டு அனுப்ப உயர் அதிகாரிகள் திட்டமிடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தான் சொன்ன வார்த்தைகளில் உறுதியாக இருப்பதாகவும், எத்தகையை விசாரணைக்கும் தயாராக இருப்பாதாகவும் காவலர் மனோஜ் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.