மும்பை: இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமீர் கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மக்கள் இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என ஒருதரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தேசியக் கொடி விவகாரத்தில் அமீர்கானின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அமீர்கானின் லால் சிங் சந்தா
இந்தியில் பல தரமான படங்களில் நடித்து சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் அமீர்கான். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் அமீர் கான் நடிப்பில் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படம், ஹாலிவுட்டில் வெற்றிப் பெற்ற ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது, கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பாய்காட் செய்யப்பட்ட அமீர்கான்
இந்தி, தமிழ் உட்பட பல மொழிகளில் உருவாகியுள்ள ‘லால் சிங் சத்தா’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அமீர்கான் தீயாக பங்கேற்று வந்தார். இதனிடையே, கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவில் சகிப்புத்தனமைக் குறித்து அமீர்கான் பேசியிருந்ததை குறிப்பிட்ட நெட்டிசன்கள், ‘லால் சிங் சத்தா’ படத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனால், தொடர்ந்து அவருக்கு எதிரான பாய்காட் போஸ்ட்கள் வைரலாகின.
வசூலில் தடுமாறிய லால் சிங் சத்தா
மேலும், ‘லால் சிங் சத்தா’ படத்தில் இந்திய ராணுவம், இந்து மதம் நம்பிக்கைகள் அவமதிக்கப்பட்டுள்ளதாக அமீர் கான் மீது, சஞ்சய் அரோரா என்பவர், டில்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய ‘லால் சிங் சத்தா’ படம், வசூலில் ரொம்பவே தடுமாறி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் திரையரங்குகளில் ‘லால் சிங் சத்தா’ படத்தின் காட்சிகளும் குறைக்கப்பட்டுள்ளன.
வீட்டில் தேசியக் கொடி!
இந்நிலையில், சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் ஒரு அங்கமாக ‘இல்லம் தோறும் தேசியக் கொடி’ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நடிகர்கள் ரஜினி, விஜய், மோகன்லால், அர்ஜுன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள், அவர்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர். அதேபோல், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானும் மும்பையில் உள்ள. தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார். இப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.