பெங்களூரு:
சுதந்திர போராட்டம்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆங்கிலேயர் காலத்துடன் அடிமைத்தனம் முடிவடைந்துவிட்டதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தான் இன்னும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிமை என்று நிரூபித்துள்ளார். இந்த பா.ஜனதா அரசு சுதந்திர போராட்டம் குறித்து விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதில் நேருைவ அரசு கைவிட்டுள்ளது. பசவராஜ் பொம்மை தனது பதவியை காப்பாற்ற எந்த நிலைக்கும் செல்வார் என்பது இதன் மூலம் தெரிகிறது.
நேரு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது அவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட மக்களை தூண்டும் வகையில் புத்தகங்களை எழுதினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை போல் நேரு கருணை கடிதத்தை ஆங்கிலேயர்களுக்கு எழுதவில்லை. சுதந்திர போராட்ட தியாகிகள் பட்டியலில் நேருவின் பெயரை இந்த அரசு கைவிட்டது. இதன் மூலம் உலகின் முன்னால் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார்.
சாவர்க்கர் படம்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். ேநரு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவாதத்தையும், மகாத்மா காந்தியை கொன்றவர்களையும் கடுமையாக எதிர்த்தார். அதனால் அந்த அமைப்பு நேரு மீது வெறுப்பை காட்டுகிறது. ஆனால் நேரு விஷயத்தில் பசவராஜ் பொம்மைக்கு என்ன ஆனது?. அரசின் விளம்பரம், சாவர்க்கர் தவிர ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட சுதந்திர போராட்டத்தை கலந்துகொள்ளவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.
சாவர்க்கர் தன்னை விடுதலை செய்யுமாறு ஆங்கிலேயரிடம் கருணை காட்டுமாறு கேட்டு கடிதம் எழுதினார். தன்னை பாதுகாத்து கொள்வதற்காக அவர்களின் கைக்கூலியாக செயல்பட்டார். ஆனால் அரசின் விளம்பரத்தில் சாவர்க்கரின் படம் முதல் வரிசையில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக போராடிய அம்பேத்கரின் படம் கடைசி வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அப்பட்டமான தீண்டாமை ஆகும். இதை பசவராஜ் பொம்மையிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. முதல்-மந்திரி பதவியில் பசவராஜ் பொம்மை நீடிக்க தகுதி இல்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.