வகுப்பில் குடிநீர் பானையை தொட்டதற்காக பட்டியலின மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: மாணவன் உயிரிழப்பு

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், குடிநீர் பானையை தொட்ட பட்டியலின மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக ஆசியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிப்பதற்காக குடிநீர் பானையை தொட்ட காரணத்திற்காக மாணவனை ஆசிரியர் ஒருவரே கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குடிநீர் பானையைத் தொட்டதற்காக ஆசிரியர் ஒருவர் ஒன்பது வயது பட்டியலின மாணவனை தாக்கியதால் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜலோர் மாவட்டத்தில் சுரானா கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் இந்திரா மேக்வால் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மேக்வாலுக்கு திடீரென தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தண்ணீர் பானையை தொட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 40 வயதான சைல் சிங் என்ற ஆசிரியர் மேக்வாலை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜூலை 20ம் தேதி அரங்கேறியுள்ளது. இதனையடுத்து, மாணவன் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வரை தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேக்வால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஆசிரியர் மீது, கொலைக் குற்றம் மற்றும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில கல்வித் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் இது குறித்து விரைவாக விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில எஸ்சி கமிஷன் தலைவர் கிலாடி லால் பைர்வா உத்தரவிட்டுள்ளார். ஜலோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஹர்ஷ் வர்தன் அகர்வாலா இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும், ஆசிரியர் சைல் சிங் மீது ஐபிசி பிரிவு 302 மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

மாணவன் மேக்வாலின் முகத்தில் காயங்கள் இருந்ததாகவும் இதனால் அவன் சுயநினைவை இழந்ததாகவும் மாணவனின் தந்தை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த சம்பவம் நடந்த உடன் மாணவன் மேக்வால் உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து உதய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இங்கு மேக்வால் ஒரு வாரமாக சிகிச்சை பெற்றிருந்ததாகவும், ஆனாலும் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மேக்வாலை அகமதாபாத்திற்கு கொண்டு சென்றதாகவும் மேக்வாலின் தந்தை கூறியுள்ளார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார் என தந்தை தேவராம் மேக்வால் கூறியுள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.