வடபழனி முருகன் கோவில் வாகனம் நிறுத்தமிட வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

வடபழனி முருகன் கோயில் வடக்கு மாட வீதியை வாகனம் நிறுத்திமிடமாக பயன்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயிலை ஒட்டிய 40 அடி அகலமுள்ள வடக்கு மாட வீதியில், வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 18 அடி அளவிற்கு வாகன நிறுத்தமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென கோயிலின் இணை ஆணையர் சார்பில் சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி சாலையை வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்திக் கொள்ள கோயில் நிர்வாகத்திற்கு அனுமதி அளித்தது. இதற்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மாநகராட்சியின் இந்த முடிவு கடந்த 2015 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணானது என்பதால் மாநகராட்சியின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வடக்கு மாட வீதியில் காலியாக உள்ள நிலத்தை தான் பக்தர்களின் வசதிக்காக வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டதாலேயே குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறினார்.

மேலும், குறிப்பிட்ட இடத்தை தற்காலிகமாக பயன்படுத்தவே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.