இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்பதற்கேற்ப இன்று 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக்கொடி பறக்க விடப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுக் கூறும் விதமாகவும், சுதந்திர தினம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரிடமும் தேசப்பற்று அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தோடு வீடு தோறும் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி தேசப்பற்றை பறைசாற்றி வருகின்றனர். அந்தவகையில் தேனி மாவட்டத்தில் கூடலூர் அருகே உள்ள KM பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஜெயராமன் தனது நிலத்தில் 100க்கும் மேற்பட்ட தேசியக்கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
கூடலூர் கே எம் பட்டி சாலையில் நெல் விவசாயம் செய்துவரும் ஜெயராமன், கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாக உள்ளதால் அவர்களிடம் சுதந்திர தினம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேசப்பற்றை அதிகரிக்கச் செய்யும் விதமாகவும் தனது நிலத்தில் 100க்கும் மேற்பட்ட தேசியக் கொடிகளை ஏற்றி உள்ளார்.
அழகிய பசுமை சூழலில் கண் கவரும் விதமாக பறந்த 100க்கும் மேற்பட்ட தேசியக் கொடியை பொதுமக்கள் ஆர்வத்துடனும் வியப்புடனும் கண்டு களித்து , விவசாயி இன் புதிய முயற்சியை பாராட்டையும் சென்றனர்.