தெஹ்ரான்: ஈரான் நாட்டில் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் வினோதமான ஒரு மருத்துவ டெஸ்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஈரான் நாட்டில் வினோதமான ஒரு போக்கு சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது. இடையில் இந்த நடைமுறை குறைந்து இருந்த நிலையில், இப்போது மீண்டும் இந்த பிற்போக்குத்தனம் அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள பெண்கள் தேவையில்லாமல் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உலக சுகாதார அமைப்பின் அழுத்தத்திற்குப் பின்னரும் அங்கு வினோத போக்கு தொடர்கிறது.
ஈரான்
அதாவது ஈரான் நாட்டில் ஆண்கள் தங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் கன்னித்தன்மை உடன் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் எனக் கேட்கிறார்களாம். இதுபோன்ற போக்கு சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது. இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று உலக சுகாதார அமைப்பு கூறும் போதிலும் இந்தப் பழக்கம் அதிகரித்தே வருகிறது.
பெண்
சமீபத்தில் மரியம் என்ற இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது முதலிரவுக்குப் பின்னர் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. “நீங்கள் கன்னிப் பெண் இல்லை. என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு இருக்கிறாய். உண்மை தெரிந்தால் நான் மட்டுமில்லை யாரும் உன்னைத் திருமணம் செய்து கொண்டிருக்க மாட்டார்கள்” என்று அவரது கணவர் திட்டியுள்ளார்.
வேதனை
இதைக் கேட்டுப் பதறிய மரியம், கன்னித்தன்மையை தான் இதற்கு முன் இழந்தது இல்லை என்றும் தான் உடலுறவு கொள்வது இதுவே முதல்முறை என்று அழுத கொண்டே கூறி உள்ளார். இருப்பினும், அவரை நம்பாமல் அவரது கணவர் கன்னித்தன்மை சான்றிதழ் வாங்கி வரச் சொல்லிக் கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஈரானில் எதோ இது அரிதான நிகழ்வு இல்லை. ஈரானில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது.
கன்னித்தன்மை சான்றிதழ்
அங்குத் திருமணம் நிச்சயம் ஆன உடன் அனைத்து பெண்களும் கன்னித்தன்மை சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஈரானில் ஆழமாக வேரூன்றி இருக்கும் பழமைவாத கலாசாரமே இதற்குக் காரணம். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருக்கும் இந்த முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அங்குள்ள பெண்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாகக் கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்பட்டன. இருப்பினும், இதற்கு எவ்வித பயனும் இல்லை.
17 வயது சிறுமி
ஈரானை சேர்ந்த நெடா என்பவர் தனது 17 வயதில் கன்னித்தன்மையை இழந்துள்ளார். இதனால் பதறிப்போன அவர், பல லட்சம் செலவில் கருவளையத்தைச் சரி செய்யும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இது ஈரானில் தடை செய்யப்பட்ட ஒன்று. இருப்பினும் சமூகத்திற்குப் பயந்து அவர் இதைச் செய்து கொண்டார், அதன் பின்னர் சில காலம் கழித்து மற்றொருவர் திருமணம் செய்து கொள்ள இருந்தார். அப்போது இருவரும் உடலுறவு கொண்ட போது, அந்த பெண்ணுக்கு ரத்தம் வரவில்லை.
கருவளைய சிகிச்சை
அதாவது பல லட்சம் செலவில் அவர் செய்த கருவளைய சிகிச்சை பலன் தரவில்லை. இதனால் அந்த நபரும் இவரை விட்டுச் சென்றுவிட்டாராம். இது நெடாவுக்கு மட்டுமில்லை. பல ஆயிரம் பெண்களுக்கு அங்கு நடக்கும் சம்பவம் தான். பெண்கள் திருமணத்தின் சமயத்தில் கன்னித்தன்மை உடன் இல்லை என்றால் திருமணத்திற்குப் பின்னர் தங்களை விட்டுச் சென்று விடுவார்கள் என்ற அங்குள்ள ஆண்கள் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம்.
உலக சுகாதார அமைப்பு
இந்த கன்னித்தன்மை சோதனை அறிவியல்பூர்வமானது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கூறி வரும் போதிலும், ஈரான், ஈராக், இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இந்த நடைமுறை தொடர்கிறது. நீதிமன்ற உத்தரவுகள் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளில் மட்டுமே இந்த முறை பின்பற்றப்படுவதாக அந்நாட்டு மருத்துவ அமைப்பு கூறினாலும், உண்மையில் நிச்சயத்திற்குப் பின் அனைவருக்கும் இந்த சோதனை செய்யப்படுகிறது. இந்த பிற்போக்குத்தனத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.