சிக்கமகளூரு : மலைப்பகுதி மாவட்டமான சிக்கமகளூரில், மழையின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது. ஆங்காங்கே அசம்பாவிதங்களை ஏற்படுத்தியுள்ளது.சிக்கமகளூரில் தொடர் மழையால் மக்கள் அவதிப்படுகின்றனர். கொப்பா, சிருங்கேரி, நரசிம்மராஜபுரா, மூடிகரே, களசா என பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்கிறது. துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகள், ஓடைகள், கால்வாய்களில் தண்ணீர் மட்டம் அதிகரித்துள்ளது.கொப்பாவின் மேகூரு, கோக்ரி, தலவானே உட்பட பல்வேறு கிராமங்களுக்கு இணைப்பு ஏற்படுத்தும் சாலை, வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாணவர்கள் பள்ளி, கல்லுாரி செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மூடிகரேவின் கன்னஹள்ளி கிராமத்தின் ஹரிஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், பாக்கு செடிகள் பாழானது. கடூரின் வரலாற்று பிரசித்தி பெற்ற மதமதா ஏரிக்கரை உடைந்து ஒரு பகுதியில் இடிந்துள்ளது. இதனால் தண்ணீர் வெளியேறி, விளை நிலங்களில் புகுந்துள்ளது.முந்தைய 24 மணி நேரத்தில் 39 வீடுகள் சேதமடைந்தன. சிக்கமகளூரின் தாசரஹள்ளி கிராமத்தில் பெரிய மரம் ஒன்று, சாலையில் உருண்டு விழுந்தது; அங்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தரிகரேவுக்கு இணைப்பு ஏற்படுத்தும் நெடுஞ்சாலையில் பெரிய மரம் விழுந்ததால் கி.மீ., கணக்கில் வாகனங்கள் நின்றது; பயணியர் பரிதவித்தனர்.மூடிகரேவின் கே.தெலகூர் கிராமத்தில், வீட்டின் மீது மரம் விழுந்ததில் இரண்டு பெண்கள் இறந்தனர். இவர்களின் வீட்டை மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அபாயமான மரங்களை வெட்டும்படி, வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தொடர் மழையால், விவசாய பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கடூர், தரிகரே பகுதிகளில் ஓரளவு மழை குறைந்துள்ளது. மேகமூட்டமான வானிலை நிலவுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement