சென்னை : நடிகர் சரத்குமார், ரோஜா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 1992ல் வெளியான படம் சூரியன்.
இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பவித்ரன் எழுதி இயக்கியிருந்தார். சரத்குமார் கேரியரில் மிகச்சிறப்பாக கைக்கொடுத்த படம் இது.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி இன்றைய தினம் 30 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையடுத்து சரத்குமார் மகிழ்ச்சிப்பதிவு வெளியிட்டுள்ளார்.
சூரியன் படம்
நடிகர் சரத்குமார், ரோஜா, கவுண்டமணி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது சூரியன். இந்தப் படத்தில் பாதுகாப்பு அதிகாரியாக நடித்திருந்தார் சரத்குமார். இதையடுத்து அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

சரத்குமார் கேரியர் பெஸ்ட் படம்
அவரை காதலிக்கும் ரோஜா அவரது சுயத்தை கண்டுபிடித்து அவருக்கு கைக்கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மனோரமா, கவுண்டமணி உள்ளிட்டவர்களின் நடிப்பும் இந்தப் படத்திற்கு சிறப்பாக கைகொடுத்தது. இயக்குநர் பவித்ரன் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருந்தார். சரத்குமார் கேரியரில் அவரை அடுத்த லெவலுக்கு இந்தப் படம் கொண்டு சென்றது.

நாட்டுப்பற்று அடிப்படை
நாட்டுப்பற்றை அடிப்படையாக கொண்டு வெளியான இந்தப் படம் சுதந்திர தினத்தையொட்டி வெளியானது மிகவும் சரியாக அமைந்தது. இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்திருந்த நிலையில், அனைத்துப் பாடல்களும் மிகவும் சிறப்பாக அமைந்தன. குறிப்பாக லாலாக்கு டோல் டப்பிமா பாடல் மிக சிறப்பாக அமைந்தது.

சிறப்பான பாடல்கள்
இந்தப் படத்திற்கான பாடல் வரிகளை பிரபல பாடலாசிரியர் வாலி எழுதியிருந்தார். இந்தப் படம் இதன் தயாரிப்பாளர்களுக்கு மூன்று மடங்கு லாபத்தை கொடுத்தது. மேலும் தெலுங்கிலும் மாண்டே சூர்யுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

உதவி இயக்குநராக ஷங்கர்
இந்தப் படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் பிரபல இயக்குநர் ஷங்கர் உதவி இயக்குநராக பணியாற்றியது கூடுதல் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி இன்றைய தினம் 30 ஆண்டுகளை கடந்துள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சரத்குமார் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

சரத்குமார் மகிழ்ச்சிப்பதிவு
கடின உழைப்பு மற்றும் டீம் வொர்க்கை ரசிகர்கள் கண்டிப்பாக பாராட்டுவார்கள் என்பதை இந்திய அளவில் நிரூபித்த படம் சூரியன் என்றும் இந்தப் படம் பல மகிழ்ச்சியான தருணங்களை நினைவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை தயாரித்த கேடி குஞ்சுமோன், இயக்குநர் பவித்ரன், இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரையும் அவர் நினைவுக் கூர்ந்துள்ளார்.

படக்குழுவினருக்கு நன்றி
மேலும் படத்தின் கேமராமேனாக பணியாற்றிய மறைந்த அசோக் குமார், ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் மற்றும் இசையமைப்பாளர் தேவாவிற்கும் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். மொத்தத்தில் கே.டி. குஞ்சுமோன், சரத்குமார், ரோஜா ஆகியோருக்கு சிறப்பாக கைக்கொடுத்த சூரியன் படம் 30 ஆண்டுகளை கடந்துள்ளது ரசிகர்களுக்கும் சிறப்பான நினைவலைகளை கொடுத்து வருகிறது.