கெய்ரோ : வடகிழக்கு ஆப்ரிக்க நாடான எகிப்தின் தலைநகர் கெய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள சர்ச்சில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 41 பேர் உயிர் இழந்தனர்; 14 பேர் காயம் அடைந்தனர்.முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள எகிப்தின் மக்கள் தொகையில் கிறிஸ்துவர்கள், 10 சதவீதம் உள்ளனர். தலைநகர் கெய்ரோவின் புறநகரில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ‘காப்டிக்’ கிறிஸ்தவர்களின் சர்ச் ஒன்று உள்ளது.
இங்கு நேற்று காலையில் அதிகமானோர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அந்த சர்ச்சில் தீவிபத்து ஏற்பட்டது; அது, மிக வேகமாக பரவியது.உடனடியாக, 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள், போலீசார் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.சர்ச்சில் சிக்கியவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீவிபத்தில், 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.மின் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.காப்டிக் கிறிஸ்துவர்களின் தலைவரான போப் இரண்டாம் தவாட்ரோஸ் உடன், அந்த நாட்டின் அதிபர் அப்துல் பதேஹ் எல்சிசி, தொலைபேசி வாயிலாக பேசினார். மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கியதாக கூறப்படுகிறது.கட்டடங்களின் பாதுகாப்பு மற்றும் தீத்தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ள எகிப்தில், அடிக்கடி தீவிபத்து சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த ஆண்டு மார்ச்சில், ஆயத்த ஆடை ஆலையில் நடந்த விபத்தில், 20 பேர் உயிரிழந்தனர்; 24 பேர் காயம்அடைந்தனர்.
வெடி விபத்தில் ஒருவர் பலி
ஆசிய நாடான ஆர்மீனியாவின் தலைநகர் யெரவானில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று நடந்த வெடி விபத்தில் ஒருவர் உயிர் இழந்தார். இந்த வெடி விபத்தில் அந்த வணிக வளாகக் கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement