நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நாளை (ஆக. 15-ம் தேதி) 75-வது சுதந்திர தினம்கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் வாகன சோதனை நடத்தப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னையில் உள்ள விடுதிகளில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டு, சந்தேக நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். வரும் 16-ம் தேதி வரை 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரைமற்றும் தமிழகத்தில் கடலோர எல்லைப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ள நிலையில், ராஜாஜி சாலையில் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கூடுதல் ஆணையர்கள் டி.எஸ்.அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, கபில்குமார் சி.சரத்கர்அறிவுரைப்படி, இணை ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும்வகையில் கருத்து பதிவிடுவோரை கண்காணிக்கவும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என்று காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.