இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாட்டின் அனைவரது இல்லங்கள்தோறும் தேசியக்கொடியை ஏற்றி தத்தம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
மேலும் தேசியக் கொடியை எப்படியெல்லாம் பறக்க விடவேண்டும், எப்படியெல்லாம் அவற்றை பயன்படுத்தக் கூடாது என்ற அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி நாட்டு மக்கள் பலரும் தங்கள் இல்லங்களிலும், வாகனங்களிலும் மூவர்ணக் கொடியை பறக்கவிட்டனர்.
சாமானிய மக்களே நாட்டின் மூவர்ணக் கொடியை அத்தனை பற்றோடு ஏற்றியிருக்கும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பிரபலமான கல்வி நிலையம் ஒன்றில் நிஜமான தேசியக் கொடிக்கு பதில் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட கொடி வைக்கப்பட்டது என்றால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
ஆம். உண்மைதான். ITT பாம்பேவின் கட்டடத்தின் மேல்புறத்தில் மூவர்ணக் கொடி பறப்பது போன்று ஃபோட்டோஷாப்பில் எடிட் செய்து அதனை IIT பாம்பேவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தின் கவர் போட்டோவாகவும் பகிர்ந்திருப்பதுதான் நெட்டிசன்களிடையே பெரும் அதிருப்தியையும், முகம் சுழிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதனைக் கண்ட இணையவாசிகள் பலரும், “இந்தியாவின் பெருமைமிக்க, பிரபமான கல்வி நிலையத்தில் இப்படி ஃபோட்டோஷாப் செய்து தேசியக் கொடியை ஏற்றுவது போல காண்பிப்பதுதான் தேசப்பற்றா?” எனவும், “இதுப்போன்று செய்து விளம்பரத்துக்காக அதனை பகிர்வதற்கு பதில் தேசியக் கொடியை ஏற்றாமலேயே இருந்திருக்கலாமே” எனவும், “மும்பையில் நிலங்களின் விலை அதிகம் என்பது அனைவருக்குமே தெரியும். அதனால்தான் கொடி ஏற்றுவதற்கான இடத்தை IIT பாம்பேவால் வாங்க முடியவில்லை” எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM