அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெருமிதம்| Dinamalar

வாஷிங்டன் : ”இந்தியாவும், அமெரிக்காவும் தவிர்க்க முடியாத நட்பு நாடுகள். மஹாத்மா காந்தி காட்டிய உண்மை, அஹிம்சை ஆகிய வழிகளில், இரு நாடுகளும், தங்கள் ஜனநாயக வெற்றிப் பயணத்தை தொடரும்,” என, இந்திய சுதந்திர தின விழாவுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, நாடு முழுதும் கொண்டாட்டங்கள் களைகட்டின. சர்வதேச நாடுகளின் தலைவர்களும், இந்திய சுதந்திர தின விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:இந்த நாள், இந்தியாவின் 75வது சுதந்திர தின நிறைவு நாள் மட்டுமல்ல, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, துாதரக ரீதியிலான உறவு ஏற்பட்டதன் 75வது ஆண்டு விழாவும் ஆகும்.

உலகெங்கும் வசிக்கும் இந்தியர்களுடன், அமெரிக்காவில் வசிக்கும் 40 லட்சம் இந்தியர்களும், சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மஹாத்மா காந்தி காட்டிய உண்மை, அஹிம்சை ஆகிய வழிகளில், இரு நாடுகளும் ஜனநாயக வெற்றிப் பயணத்தை தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய மக்களின் மகிழ்ச்சியில், அமெரிக்க மக்களும் இணைந்து கொள்கின்றனர். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும், உலக நாடுகளின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பாடுபட வேண்டும்.

தடையற்ற, சுதந்திரமான இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்தவும், சர்வதேச அளவில் எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ளவும், இந்தியாவும், அமெரிக்காவும் எப்போதும் இணைந்து செயல்படும். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, இரு நாட்டு மக்களிடையே நிலவும் பற்றுதலால், மேலும் பலப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.அமெரிக்காவின் வளர்ச்சியில், இங்கு உள்ள இந்தியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்திய தேசியக்கொடி

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், முதல் முறையாக, நேற்று இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது. இதில், தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. பாஸ்டன் நகரில் வசிக்கும் இந்திய, அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல், 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்களும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த அணிவகுப்புக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங், தலைமையேற்றார். பல்வேறு நாடுகளின் அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் 220 அடி நீள தேசியக் கொடிகள் விமானம் வாயிலாக, பாஸ்டன் நகரின் வான் பகுதியில் பறக்க விடப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.