நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் 2ஆவது ஆண்டாக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தேசியக்கொடி ஏற்றிய போது மூவர்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. அத்துடன் பேண்ட் வாத்தியங்கள் முழுங்க தேசிய கீதம் பாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து உரையாற்றிய ஸ்டாலின், “சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு எனது வீர வணக்கம். எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்த கருணாநிதியை நினைவு கூர்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, “எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக அண்ணல் காந்தி அடிகள் இருக்கிறார். மதவெறியால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, இந்த நாட்டை காந்தி தேசம் என அழைக்க வேண்டும் என தந்தை பெரியார் கேட்டுக்கொண்டார்” என்றார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை கூறி, பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருது வழங்கினார். அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும். 1.7.2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்
அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்றார்.
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் தகைசால் தமிழர் விருது மற்றும் பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர், துணிவு, சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை நாகை மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசிக்கு வழங்கினார்.
பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி, சவேரியார் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ச. இஞ்ஞாசிமுத்துக்கு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பித்தார். விருது பெற்றவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தகைசால் தமிழர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதை நல்லகண்ணு முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். அத்துடன் தன் சொந்த பணம் ரூ.5000 கொடுத்து 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பரிசுத் தொகையான ரூ.10 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார் நல்லகண்ணு. நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil