ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக… அடக்கி ஆள்வாரா ஸ்டாலின்?

மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு, பொள்ளாச்சியில் சரக்கு லாரி மீது கல்வீச்சு, தருமபுரியில் பாரதமாதா கோயில் பூட்டு உடைப்பு என பாஜகவினர் தங்களது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவற்றில் மதுரை, தருமபுரி சம்பங்களில் தங்களுக்கு உரிய அனுமதி மறுக்கப்பட்டதுதான் தாங்கள் வன்முறையை கையில் எடுக்க காரணம் என்று அவர்கள் சமாதானம் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

சம்பவம் 1:
ஆனால், ஜம்மு -காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரருக்கு தமிழக அரசின் சார்பில் முதல் மரியாதை செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் அமைச்சர் பிடிஆருக்கு இருக்கும்போது அவரது கார் மீது செருப்பு வீசியது இந்தியாவை ஆண்டுக்கொண்டு, தமிழ்நாட்டில் வளர துடித்துக் கொண்டிருக்கும் கட்சிக்கு கொஞ்சமும் அழகல்ல.

அமைச்சரை போலவே, பிற கட்சிகளின் பிரமுகர்களும் விமான நிலையத்திலேயே ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்த முடியுமா? இதில் மாவட்ட நிர்வாகத்தின் முடிவு என்ன? என்பன போன்ற கேள்விகள் இதில் எழுகின்றன. அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்தே, மறைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்றால், ராணுவ வீரர் லெட்சுமணனுக்கு பிற கட்சி பிரமுகர்கள் எப்படி இறுதி அஞ்சலி செலுத்தினார்களோ அதே போன்றுதான் பாஜகவினரும் அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டும்.

அதனைவிடுத்து அமைச்சர் காரில் செருப்பை வீசி தங்கள் பெயரை தாங்களே கெடுத்து கொண்டுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தால் திமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகியும்விட்டார்.

சம்பவம் 2:
பொள்ளாச்சியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கற்கள் கடத்தப்படுவதாக கூறி, சரக்கு லாரி மீது கற்களை வீசியுள்ளனர் பாஜகவினர். இதுபோன்ற சம்பவங்களில் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம், காவல் துறையிடம் பாஜக சார்பில் முறைபடி புகார் கொடுக்கப்பட்டதா, அப்படி புகார் கொடுத்தும் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்து அவர்கள் லாரியை மறித்து அமைதியான முறையில் தர்ணா போராட்டம் நடத்தி இருக்கலாம்… இந்த பிர்ச்னையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்து சென்று சட்டரீிதியாகவும் அணுகியிருக்கலாம். மாறாக கற்களை ஏற்றிச் சென்ற லாரி மீது கல்வீசி தங்களின் இமேஜை தாங்களே டேமேஜ் செய்து கொண்டுள்ளனர் பாஜகவினர். பொள்ளாச்சி நகர பாஜக தலைவரான பரமகுரு என்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் 3:
தருமபுரி மாவட்டம், பாப்பாரெட்டிப்பட்டியில் பாரதமாதா ஆலயத்துக்குள் சென்று பாரதமாதாவுக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் அதிமுக, திமுக பிரமுகருமான கே.பி.ராமலிங்கம் தலைமையிலான பாஜகவினர். ஆலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து தங்களது தேசபக்தியை பறைசாற்றி உள்ளனர்.

இதில் ஆலயத்துக்குள் நுழைய அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதா அல்லது பாஜகவினர் மட்டும் அனுமதிக்கப்படவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு தங்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டால், அதனை பாஜகவினர் சட்டரீதியாக அணுகி அதில் வெற்றி காண வேண்டுமே தவிர, இப்படி பூட்டை உடைப்பதை அவர்கள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஆட்டம் ஆரம்பம்:
தமிழ்நாட்டில் பாஜகவினர் அடுத்தடுத்து நிகழ்த்தியுள்ள இந்த வன்முறை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட பிரமுகர்களை உடனடியாக கைதும் செய்துள்ளனர் போலீசார். ஆனால், தமிழகத்தில் எப்படியாவது வேரூன்றியே ஆக வேண்டும் என்ற முடிவில் களமிறங்கிவிட்ட பாஜகவினரின் இதுபோன்ற அதிரடி ஆட்டங்களை இனி அடக்குவதே ஸ்டாலினுக்கு பெரும் சவாலான விஷயமாக அமையலாம்.

மேற்கு வங்கத்தில் பாஜகவை வளர்த்த ஃபார்முலாவையே தமிழ்நாட்டிலும் அவர்கள் பின்பற்றலாம். இவற்றையெல்லாம் முறியடிப்பதே அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு ஒரு வேலையாககூட மாறும் அபாயம் உள்ளதென்று எச்சரிக்கின்றனர் அவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.