ஆர்.நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது – முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் | விருதுகள் முழு விவரம்

சென்னை: சுதந்திர தின விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை முதல்வர் மு.க.ஸ்டா லின் வழங்கினார்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு விருதுகளை வழங்கினார். இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.

நெல்லை பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரியின் சவேரியர் ஆய்வு நிறுவன இயக்குநர் ச.இஞ்ஞாசிமுத்துவுக்கு அப்துல் கலாம் விருதும், நீச்சல் தெரியாத போதும் தண்ணீரில் மூழ்கிய 2 குழந்தைகளை காப்பாற்றிய நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த பா.எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்பட்டது. ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ விருது, முதல்வரின் முகவரி துறையில் துணை ஆட்சியர் மற்றும் பொது குறை தீர்ப்பவராக பணியாற்றும் எஸ்.லட்சுமி பிரியாவுக்கு வழங்கப்பட்டது.

நல்ஆளுமை விருது

திருநங்கைகள் வாழ்க்கை மாற்றத்துக்கான முன்முயற்சிக்காக செங்கல்பட்டு மாவட்ட சமூகநல அலுவலர் சங்கீதா வீரா சந்தானம், சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை மீட்டுருவாக்கி புனரமைத்ததற்காக மாவட்ட முன்னாள் ஆட்சியரும் தற்போதைய புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரு மான ஜெ.ஜெகன்நாதன், கைபேசி செயலி மூலம் வேளாண் வாடகை இயந்திரங்கள் வழங்கும் திட்டத்துக்காக தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் பிரிவு முதன்மைப் பொறியாளர் முருகேசன், முதியோர், இயலாதோர் மறுவாழ்வுக்காக பணியாற்றியதற் காக சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருதை முதல்வர் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்ட ஊட்டியைச் சேர்ந்த மருத்துவர் பி.ஜெயகணேஷ் மூர்த்தி, ரெனேசான்ஸ் அறக்கட்டளை (புதுக்கோட்டை), சமூக சேவகர் எஸ்.அமுதா சாந்தி, தனியார் வேலை அளிப்பு நிறுவனம் டாஃபே ஜெ ரிகாப் சென்டர் (மதுரை), திண்டுக்கல் மாவட்ட வங்கி ஆகியவற்றுக்கும் விருது வழங்கப்பட்டது.

அதேபோல மகளிர் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்ததற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வானவில் அறக்கட்டளை நிர்வாகி ரேவதிக்கும், சிறந்த சமூக சேவகருக்கான விருது, திண்டுக்கல்லை சேர்ந்த ஜி.பங்கஜத்துக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த மாநகராட்சிக்கான விருதுடன் ரூ.25 லட்சத்தை சேலம் மாநகராட்சி பெற்றது. சிறந்த நகராட்சிகளில் முதல் பரிசு ரூ.15 லட்சம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், 2-ம் இடத்துக்கான ரூ.10 லட்சம் குடியாத்தம் நகராட்சிக்கும், 3-ம் பரிசான ரூ.5 லட்சம் தென்காசிக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு ரூ.10 லட்சம் கருங்குழிக்கும், 2-ம் பரிசு ரூ.5 லட்சம் கன்னியாகுமரிக்கும், 3-ம் பரிசான ரூ.3 லட்சம் சோழவந்தானுக்கும் முதல்வர் வழங்கினார்.

மாநில இளைஞர் விருது

முதல்வர் மாநில இளைஞர் விருதை பொறுத்தவரை ஆண்கள் பிரிவில் வேலூரைச் சேர்ந்த பி.விஜயகுமார் (முதலிடம்), நீலகிரி மாவட்டம் எம்.முகமது ஆசிக் (2-வது இடம்), வேலூர் மாவட்டம் காந்த் (3-வது இடம்), பெண்கள் பிரிவில் நாகப்பட்டினம் மாவட்டம் ச.சிவரஞ்சனி ஆகியோருக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. விருது பெற்ற அனைவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

முதல்வர் நிவாரண நிதிக்கு விருது தொகையை தந்த நல்லகண்ணு

தகைசால் தமிழர் விருதுக்கான ரூ.10 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்தை ஆர்.நல்லகண்ணுவிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதை பெற்றுக்கொண்ட நல்லகண்ணு, ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையை சேர்த்து ரூ.10 லட்சத்து 5 ஆயிரமாக முதல்வரிடம் கொடுத்தார். முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இந்த தொகையை தருவதாக அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அனைவரையும் நெகிழச் செய்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.