ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன்! 1911 ஜூன் 17 சனிக்கிழமை காலை நடந்த படுகொலை பின்னணி என்ன ஆவணங்கள் மற்றும் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலான செய்தி தொகுப்பு..
நம் நாட்டின் சுதந்திர வரலாறு அகிம்சை போராட்டத்தினால் மட்டுமல்ல, தனக்கு விருப்பமான உறவுகளை தவிக்க விட்டு தன் இன்னுயிரை தாய் நாட்டிற்காக கொடுத்த பல போராளிகளின் உதிரத்தாலும் எழுதப்பட்டுள்ளது. தியாகத்தின் பலனை போராளிகளோ அவர்களின் உடன் இருந்த உறவுகளோ பிரதிபலனை அனுபவிக்க முடியாமல் போனதுதான் துரதிருஷ்டம். அவர்களின் அடுத்த கட்ட வாரிசுகள் தற்போது தியாகத்திற்கான பெயரை சுமந்தாலும் அந்தப் போராளிகள் கொடுத்த சுதந்திர காற்று இன்று நம்மை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது. இப்படி ஒரு போராளிதான் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்து வளர்ந்த சங்கரன் என்ற வாஞ்சி.
இவர் ரகுபதி ஐயர் ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 1886 ஆம் ஆண்டு பிறந்தவர். திருவனந்தபுரத்தில் பி ஏ பட்டப்படிப்பு முடித்தவர். செங்கோட்டை என்பது அப்போது பிரிக்கப்படாத பகுதியாக கேரளம் மாநிலத்தோடு தொடர்புடையதாக இருந்தது. இதனால் கல்லூரி படிப்பு முடித்ததும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வனத்துறையில் அரசு பணி கிடைத்து பணியாற்றி வந்தார். நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் என்ற ஊரைச் சேர்ந்த பொன்னம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த புதிதில் பிறந்த பெண் குழந்தை இறந்ததாக தகவல் உள்ளது. இப்படி தான் வாழ்ந்த பகுதி, தனக்கான உறவுகள் என இருந்த வாஞ்சி சுதந்திர போராட்ட தியாகிகளின் கதைகளை கேட்டு வளர்ந்துள்ளார். நாம் பிறந்த நாட்டை வணிகம் செய்ய வந்த வெள்ளையன் ஆள்வதா என்று குரல் எழுப்பியவர். இப்படிப்பட்ட சூழலில் தான் ஒரு மனிதனை கொலை செய்யும் அளவிற்கு துணிந்த ஒரு போராளியாக மாறினார் வாஞ்சி.
கொலைச் சம்பவம்:
ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் மக்கள் அவர்களை கொல்வதற்கு துணிந்ததில்லை. கொலை செய்யும் அளவிற்கு இந்திய மக்கள் வருவார்கள் என்று வெள்ளைக்காரர்களும் நினைத்திருக்கவில்லை. இப்படி ஒரு சூழலில் தான் அந்த கொலை நடந்தது. கொலை செய்ய வேண்டும் என்ற திட்டம் உருவானதும் தனது வனத்துறை பணியிலிருந்து மூன்று மாதம் விடுப்பு எடுத்து கொண்டார். புதுச்சேரி சென்று வ.வே.சு. ஐயரிடம் சேர்ந்து ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டார். இதற்காக வனத்துறை பணியில் இருந்த போது துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். பின்னாளில் விசாரணையில் வனத்துறையில் துப்பாக்கி காணாமல் போனதாக புகார் ஒன்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்துதான் அந்த கொலை சம்பவம் நடந்தது.
1911 ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி சனிக்கிழமை காலை மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பு இயல்பான சூழலில் தான் இருந்தது காலை 10 மணி வரை. தூத்துக்குடியில் இருந்து நெல்லை மாவட்ட கலெக்டர் ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ்துரை தனது மனைவி மேரியுடன் தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி ரயில் நிலையத்திற்கு பயணித்து வந்துள்ளார். தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு நேரடியாக செல்ல ரயில் வசதி கிடையாது என்பதால் மணியாச்சி வந்து தான் மாற்று ரயிலில் செல்ல வேண்டும் அதன் அடிப்படையில் மணியாச்சிக்கு காலை 10:38 மணிக்கு வந்து சேர்ந்த ஆஷ் துரை, சிலோன் போட் மெயில் என்ற கொடைக்கானல் செல்லும் ரயில் வந்ததும் அதில் முதல் வகுப்பில் ஏறி அமர்கிறார். அவரது எதிர் இருக்கையில் மனைவி மேரி அமர்கிறார்.
பத்து நிமிட இடைவெளி விட்டு ரயில் புறப்பட்டு செல்லும். இதனை முன்கூட்டியே விசாரித்து அறிந்து திட்டம் தீட்டி இருந்த வாஞ்சிக்கு, தான் செய்யப் போகும் காரியத்தின் விளைவு தெரிந்து மிகவும் தைரியமாக எதிரே இருக்கும் உயிருள்ள ஒரு மனிதரை சுட்டுக் கொள்ளும் மன தைரியத்துடன், முதல் வகுப்பு பெட்டிக்குள் செல்கிறார். வாஞ்சி பஞ்சகஜம் மற்றும் மேலே கோட் அணிந்து மிடுக்கான தோற்றத்தில் இருப்பதால், யாரும் எளிதில் சந்தேகம் கொள்ளவில்லை. ரயில் நின்று செல்லும் பத்து நிமிட இடைவேளையின் போது கலெக்டரின் காவலர் தண்ணீர் பிடிக்க இறங்கி செல்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக முதல் வகுப்பு புகைவண்டி பெட்டியில் நுழைந்த வாஞ்சி அங்கு அமர்ந்திருந்த ஆஷ்துரையை நோக்கி தான் கொண்டு வந்திருந்த பெல்ஜியம் நாட்டு பிரௌனிங் ரக துப்பாக்கியால் சுடுகிறார்.
மூன்று குண்டுகள் வரை வெடித்ததாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்தில் குண்டு பாய்ந்து படுகாயத்துடன் இருக்கையில் இருந்து சரிகிறார் ஆஷ் துரை. மனைவி மேரி அதிர்ச்சியில் அலறுகிறார். என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் புகைவண்டி பெட்டியைச் சுற்றிலும் மக்கள் பதறியபடி ஓட சுட்டு ஒடிய வாஞ்சியை தேடி காவலர்கள் ஓடுகிறார்கள். அப்போது கலெக்டரின் உதவியாளர் காதர்பாஷா என்பவர் வாஞ்சியை தடுத்து பிடிக்க பார்க்கிறார். அப்போது கையில் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி ஓடுகிறார் வாஞ்சி. அருகில் இருந்த கழிப்பறைக்குள் சென்று மறைந்து கொள்கிறார். அது பெண்களுக்கான கழிப்பறை என வெளியே வரைந்திருந்த உருவப்படம் சொல்கிறது. உடனடியாக வெளியேறி ஆண்கள் கழிப்பறைக்குள் சென்று உள்ளே தாழிட்டு கொள்கிறார்.
கூட்டத்தில் எந்த திசையில் ஓடினார் என்பது தெரியாமல் காவலர்கள் துரத்தினர். அப்போது மணியாச்சி ரயில் நிலைய மேலாளராக பணியாற்றியவர் அருளானந்தம். அவரின் மகன்கள் மரியதாஸ் மற்றும் ஆரோக்கியராஜ் இருவரும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சிறுவர்கள் தான் வாஞ்சி கழிப்பறையை நோக்கி ஓடுவதை கூறியுள்ளனர். ஆனால் காவலர்கள் கழிப்பறைக்குள்ளே செல்வதற்குள் வாஞ்சி தான் கொண்டு சென்ற துப்பாக்கிக் கொண்டு, தான் யார் என்பது தெரியக்கூடாது என்பதற்காக தன் வாயில் துப்பாக்கியை நுழைத்து சுட்டு வீர மரணம் தேடிக் கொண்டார். பத்து நிமிடத்திற்குள் இரண்டு உயிரிழப்புகள் நடந்து விட்டது. அது அந்த ரயில் நிலைய சந்திப்பையே மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கி விட்டது. அது மட்டுமல்ல அன்றைய செய்தி மறுநாள் தலைப்புச் செய்தியாக மாறிப்போனது.
இதுவரை வெள்ளைக்காரர்களுக்கு எதிராக இந்த ஒரு பயங்கரத்தை யாரும் செய்ததில்லை. அதேநேரம் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் முகம் சிதைந்து போன வாஞ்சியின் உயிரிழந்த உடலை மீட்ட காவல்துறையினர் சட்டைப் பையில் சோதனையிட்டபோது, புகைவண்டியில் இரண்டாம் வகுப்பு பயணத்திற்கான டிக்கெட் ஒன்றும், பிரான்சில் இருந்து வெளிவந்த வந்தே மாதரம் என்ற புத்தகத்தின் தலையங்கப் பகுதியும் கிழித்து வைத்திருந்தார். மற்றொரு காகிதத்தில் சனாதான தர்மத்தை அழித்து ஐந்தாம் ஜார்ஜ்க்கு முடிசூட்ட பார்க்கிறார்கள். இதனை ஒவ்வொரு இந்தியனும் எதிர்க்க வேண்டும். மதராசில் 3000 பேர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததும் அவரைக் கொல்வதற்காக சபதம் போட்டுள்ளனர். எங்களின் எண்ணத்தை வெள்ளையர்கள் அறிவதற்காக எங்கள் கூட்டத்தில் சிறியவனாகிய இளையவன் நான் இந்த காரியத்தை செய்கிறேன். இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் இது போன்ற செயலை செய்யவதை கடமையாக கருதுகிறார்கள் என எழுதி ஆங்கிலத்தில் தமிழிலும் கையெழுத்திட்டு இருந்தார்.
கொலைக்கான பின்னணி:
மனைவி மேரி கண் முன்னே அவரது கணவர் ஆஷ் துரை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விரும்பத்தகாதது தான் என்றாலும் இந்த கொலை நடப்பதற்கான பின்னணி தான் இந்த சம்பவத்திற்கு அடித்தளமாக அமைந்தது. 1908 ம் ஆண்டு பிப்ரவரி 27ம் நாள் தூத்துக்குடியில் கோரல் மில் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இது நடத்தியவர் வ உ சி. இந்த போராட்டத்தை எதிர்கொண்டு கையாண்டவர் அப்போதைய சப் கலெக்டராக இருந்த ஆஷ் துரை. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஆஷ்துரை. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது. ஆனால் அது தனக்கு தனிப்பட்ட முறையில் தோல்வியாகவும், அவமானதாகவும் கருதிக்கொண்டார் ஆஷ் துரை.
இதைத் தொடர்ந்து வ உ சி யை பழிவாங்க காத்திருந்தார் ஆஷ் துரை. வங்காளத்தில் பிபின் சந்திர பால் விடுதலையை சுதந்திர நாளாக கொண்டாட முடிவு செய்து இருந்தனர் சுதந்திர போராளிகள். 1908 மார்ச் 12 ம் தேதி வ.உ.சி, பத்மநாபா ஐயங்கார் சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து பெரிய ஊர்வலம் நடந்தது. இதனை தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார் ஆஷ்துரை. வெள்ளையர்கள் சுட்டதில் 12 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் இந்த கலவரத்தில் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து வ உ சி மற்றும் சுப்பிரமணிய சிவா இருவருக்கும் 40 ஆண்டுகள் வரை இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைத்தார் ஆஷ் துரை. இந்த காரணங்கள் சுதந்திரப் போராளிகள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த கொந்தளிப்பில் கோபம் அடைந்த ஒருவர்தான் வாஞ்சி. வ உ சி மீதான அதிகார அடக்குமுறை ஏற்படுத்திய பாதிப்பு ஒருபுறம், இன்னொரு புறம் ஐந்தாம் ஜார்ஜ் பதவியேற்பு நிகழ்வு அறிந்து மிகவும் கோபம் உற்றார் வஞ்சி நம் இந்திய தேசத்தில் அந்நியனுக்கு பட்டமளிப்பு விழாவா என கொந்தளித்த வாஞ்சி இந்த இரு காரணங்களால் தான் ஆஷ்துரையை கொன்று விட துணிந்தார். 16 பேர் இந்த திட்டத்திற்கு ஒத்துவர 16 பேரின் பெயர்களும் துண்டு சீட்டில் எழுதி போட்டு குலுக்கல் முறையில் எடுத்ததில் அதில் வாஞ்சி பெயர் வந்தது என்கிறார்கள். வாஞ்சி தற்கொலை செய்து கொண்ட பிறகு இந்த திட்டத்திற்கு காரணமாக இருந்தவர்கள் என மற்றும் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டார்கள். இவரது குடும்பம் 1942 ஆம் ஆண்டு வரை வெள்ளையர்களால் வீட்டுச் சிறை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
– நெல்லை நாகராஜன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM