சியாச்சின்: உலகின் மிக உயர்ந்த போர்முனையான சியாச்சினில் இந்திய தேசியக் கொடியை நமது ராணுவ வீரர்கள் பறக்கவிட்டுள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு சுதந்திர தினத்தை மக்கள் மிகுந்த உற்சாக மனநிலையில் கொண்டாடி வருகின்றனர். வீடுகள் தோறும் தேசியக் கொடிகளை ஏற்றியும், அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகளை வழங்கியும் சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். பல இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் ராணுவம், விமானப்படை, கடற்படைத் தளங்களிலும் இன்று காலை தேசியக் கொடி ஏற்றப்பட்டு வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில், காஷ்மீரின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான போர்முனையான சியா்சசினிலும் ராணுவ வீரர்கள் நமது மூவர்ணக் கொடியை ஏற்றி தேசிய கீதத்தை இசைத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உறைய வைக்கும் சியாச்சின்
இமாலயத்தில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் 23 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் பனிச் சிகரம் அமைந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைந்துள்ள இந்த சியாச்சினின் எல்லைகள் முறையாக பிரிக்கப்படவில்லை எனக் கூறி பாகிஸ்தான் பிரச்னை செய்தது. இந்த சூழலில்தான், 1984-ம் ஆண்டு சியாச்சினில் உள்ள பானே போஸ்ட் என்ற 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட போர் நிலையை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. இதனைத் தொடர்ந்து, ஆபரேஷன் மேஹதூத் மூலம் பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து சியாச்சின் மலைத்தொடர் முழுவதையும் இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அன்று முதல் அங்கு ராணுவ முகாமையும் இந்தியா அமைத்தது.
சியாச்சினில் ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு பனி இருக்கும். காலையில் மைனஸ் 25 டிகிரியும், இரவில் மைனஸ் 55 டிகிரியும் குளிர் காணப்படும். இதனால் இங்கு தங்குவது என்பது மிகவும் கடினம். மேலும் முழுவதும் பனி உறைந்திருப்பதால் தூய குடிநீர் கிடைப்பது என்பது மிகவும் அரிது. இதனால் அவர்கள் கொண்டு வரும் நீரை, நெருப்பில் காட்டி உருக வைத்து சிறிது சிறிதாகவே பருக வேண்டும். இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்துதான் நமது ராணுவ வீரர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு பணியாற்றுவதற்கென ராணுவ வீரர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சியாச்சின் உச்சியில் ராணுவ வீரர்கள் 90 நாட்களுக்கு பணியாற்ற வேண்டியிருக்கும். அதன் பிறகு ஷிப்ட் முறையில் மற்ற ராணுவ வீரர்கள் இங்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
சியாச்சினிலிருந்து திரும்பிய வீரர்களுக்கு எடை இழப்பு, அதிக தூக்கம், ஞாபக மறதி மற்றும் பாலியல் ஆர்வம் குறைதல் ஆகிய நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.