இத்தாலிக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடி

இலங்கை இத்தாலிய தூதரக அதிகாரி ஒருவர் போல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, பெண் ஒருவரிடம் நான்கு இலட்சத்து ஏழாயிரம் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் நேற்று (14) கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து, இத்தாலிய தூதரகத்தால் வெளியிடப்படும் விசேட ஸ்டிக்கரைப் போன்ற 27 ஸ்டிக்கர்கள், போலி முத்திரைகள் மற்றும் ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் 42 வயதான ஒருவர் என்பதுடன், ஆதியம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி தூதுவரிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இத்தாலி செல்வதற்கு தேவையான ஆவணங்களை கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் தூதரகத்திடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் குறித்த பெண் தூதரகத்திற்கு வந்த போது சந்தேக நபரை சந்தித்துள்ளார்.

அப்போது ​​சந்தேகநபர், தான் தூதரகத்தில் பணிபுரிபவர் எனக் கூறி, குறித்த பெண்ணிடம் அவருடைய தேவைகளை விரைவாக நிறைவேற்றித் தருவதாக, பணம் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.